வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

 

கோவை, நவ. 27: கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில், 14 லட்சத்து 96 ஆயிரத்து 770 ஆண் வாக்காளர்களும், 15 லட்சத்து 51 ஆயிரத்து 665 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 569 பேர் என மொத்தம் 30 லட்சத்து 49 ஆயிரத்து 4 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் கடந்த 4,5 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 1017 வாக்குச்சவாடி மையங்களில் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்கள் நீக்கம் செய்ய வேண்டுபவர்கள் பங்கேற்றனர். இளைஞர்கள் பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வத்துடன் விண்ணப்பம் அளித்தனர். மேலும், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகளுக்கும் வாக்காளர்கள் விண்ணப்பம் அளித்தனர்.

இந்நிலையில், சிறப்பு திருத்த முகாமில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பொதுமக்களுக்கு பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்து உரிய விளக்கம் அளிக்காமல் அவர்களை அலைக்கழிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெரும்பாலான மையங்களில் மாலை 5 மணிக்கு முன்பே சிறப்பு முகாமில் இருந்த அலுவலர்கள் பலர் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்காளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் appeared first on Dinakaran.

Related Stories: