ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக படிக்கும் 40 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி

*அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்ைட மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் 40 மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினியை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கலெக்டர் வளர்மதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். மேலும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் உயர்கல்வியில் சேர்ந்து படித்து உயர வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், ஒரு சிறந்த முன்னெடுப்பாக வேறு எங்கும் இல்லாத வகையில், அரசு பள்ளியில் சிறப்பாக படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகள் இன்றைய கணினி உலகில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக நீட், ஜே.இ.இ பாடங்கள் அடங்கிய மற்றும் இணைய வசதியுடன் உள்ள கையடக்க கணினியை சமூக பங்களிப்பு நிதியில் வழங்க கலெக்டர் வளர்மதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023- 24ம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பயிற்சி தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண் அதிகம் பெற்ற 24 அரசு பள்ளிகளை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கி பேசியதாவது:
தமிழ்நாடு முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் விளங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

நீட், ஜே.இ.இ. தேர்வுகளில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த வருடம் 12 நபர்களும், இந்த வருடம் 17 நபர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று சென்றுள்ளனர். இவர்களுக்கான பாடப்புத்தகங்கள் என்னுடைய சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளேன்.அந்த வகையில் கலெக்டர் தன்னுடைய முயற்சியால் ஒரு முன்னுதாரனமாக அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகளின் மீது அக்கறை கொண்டு இந்த கையடக்க கணினியை வாங்கி கொடுத்துள்ளார். அவருக்கு மனம் நிறைந்த பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ, மாணவிகள் இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நோக்கத்திற்கு வழங்கப்படுகிறதோ அதை நிறைவேற்ற
கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், ஆர்டிஓ மனோன்மணி, சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜி அப்துல்மஹித் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக படிக்கும் 40 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி appeared first on Dinakaran.

Related Stories: