திருமண வரம் அருளும் மயூரநாதர்

உமாதேவி, நந்தி தேவர் வழிபட்ட தலம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பனப்பாக்கத்தில் அமைந்துள்ளது மயூரநாதர் கோயில். இங்கு அன்னை உமையவள் சவுந்தரநாயகி என்ற திருநாமத்தோடு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் சுமார் 1000வருடங்கள் பழமை வாய்ந்தது. அகத்தியருக்கு கையிலையிலிருந்து சிவபெருமான் திருக்கல்யாணக் கோலத்தை காட்சிகொடுத்து அருளிய தலம். மேலும் அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன் இங்கு வந்து மயூரநாதரை வணங்கி வடதிசையில் லிங்கமூர்த்தியையும் அகிலாண்டநாயகியையும் ஸ்தாபித்து பொதிகைமலைக்கு சென்றனர்.

ஒரு சமயம் சிவன் கயிலாயத்தில் உத்தியான வனத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் தியானத்தில் இருக்கும்போது உமாதேவியும் நந்திதேவரும் அவ்விடத்தை விட்டு வனத்தின் எழிலை காண சென்றனர். உமாதேவி மயில் தோகை விரித்து ஆடுவதையும், நந்தித்தேவர் புலியின் விளையாட்டையும் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். சிவபெருமான் தியானத்திலிருந்து எழுந்து பார்த்தபோது உமாதேவியும், நந்திதேவரும் காணவில்லை. இதனால் சிவபெருமான் கயிலாயம் சென்றார்.

வனத்தில் இருந்து திரும்பி வந்த உமாதேவியும் நந்திதேவரும் திரும்பி வந்து பார்த்தபோது சிவபெருமான் அங்கு இல்லை. இதனால் இருவரும் கயிலாயம் சென்றனர். அப்போது சிவபெருமான், ‘நீங்கள் இருவரும் என்னை மறந்து மயில் ஆட்டத்தையும், புலியின் விளையாட்டையும் பார்த்துக்கொண்டிருந்ததால் புவியில் மயிலாகவும், புலியாகவும் மாறுக’ என சபித்தார். இதனால் இவ்விருவரும் சாபம் நீங்க வழியாதென வினவ ‘பூவுலகில் தொண்டை நாட்டில் முகமண்டலம் போன்ற காஞ்சிக்கு ஒருகாத தொலைவில் பனசையம்பதியில் சோதிவடிவாக உள்ள பெருமானை பூசிக்க இச்சாபம் விலகும்’ என்றார்.

அதன்படி உமாதேவி பல வனாந்திரங்களை கடந்து இங்கு வந்த சோதிலிங்கபெருமானை அடைந்து பூசித்தார். பூசனைக்கு மகிழ்ந்த சிவபெருமான் காட்சியளித்து வேண்டும் வரம் யாதென வினவ, ‘ ஐயனே என்சாபம் நீங்கப்பெற்றதை போன்று உம்மை பூசிக்கும் அடியார்களின் ஆணவ பிணி நீங்கவும் இத்தலம் காஞ்சிக்கு அணித்தாக உள்ளதால் விசாலகாஞ்சி என பெயர் பெறவும் அருள் செய்தல் வேண்டும்’ என்றார். இறைவன் அவ்வாறே வரம் அளித்தார். உமையின் மயிலுருவத்தை அருளுடன் நோக்க அதிலிருந்து பாக்கு, பனை, தெங்கு, தாளிப்பனை, ஈந்து (ஈச்சை) ஆகிய ஐவகை மரங்களும் தோன்றின.

மேலும் இறைவன் ‘உனது வடிவம் மிக்க வனப்புடன் இருப்பதால் உலகத்தார் சவுந்தரநாயகி என உன்னை அழைப்பார்கள். நீ என் இடப்பாகம் வந்து அமருவாய்’ என்று கூறி மறைந்தார். அன்று முதல் மயில் பூசித்ததால் அச்சோதிலிங்க பெருமானுக்கு மயூரநாதன் (மயூரம்-மயில்) என்றும் தலவிருட்சம் பனை ஆதலால் பனசையம்பதி என்றும், பஞ்ச தால மரங்கள் தோன்றியதால் தாலமாநகர் என்றும் பெயர்பெற்றது.

அதேபோல் நந்திதேவர் புலி உருவம் தாங்கி பனசைநகர் வந்து சேர தனது துற்குணங்கள் நீங்கி சற்குணத்துடன் சோதிலிங்கப்பெருமானை பூசிக்க சிவபெருமான் சவுந்தரநாயகியுடன் காட்சி தந்து தன்னை விட்டு நீங்கா வரமும் தந்தார். நந்திதேவர் புலி உருகொண்டு இறைவனை பூசித்ததால் திருப்புலியீசன் என்றும் இத்தலம் சிவபுரத்திற்கு ஒப்பானதால் சிவபுரம் என்றும் வழங்கப்படுகிறது. இந்திரன் ராமபிரானால் சாபம் பெற்ற தன் மகன் சயந்தனின் சாபம் தீர மயூரநாதரை வேண்டி சாபவிமோசனம் பெற்றார்.

மேலும் தென்மேற்கு திசையில் ஒரு சிவலிங்கம் நிறுவி பூஜை செய்ய எம்பெருமான் சூரிய ஒளி போன்று காட்சி தந்ததால் அருணாசலேஸ்வரன் என்று பெயர் பெயரிட்டு வணங்கி தன் இந்திர உலகம் சென்றான். கங்கா தேவியால் சிறகுகள் ஒடிக்கப்பட்ட அன்னப்பறவைக்கு மீண்டும் அதே பொலிவு பெற வேண்டி பிரம்மன் அன்னத்துடன் இத்திருத்தலம் வந்து மயூரநாதரை வணங்கினார். அன்னப்பறவை மீண்டும் புதுபொலிவு பெற்றதால், கோயிலுக்கு தெற்கே அரை கடிகை தூரத்தில் ஒரு லிங்கத்தை அமைத்து பூஜை செய்து அருள்பெற்றார். இந்த சிவபெருமானுக்கு விரிஞ்சகேசன் என்ற திருநாமம் ஏற்பட்டது.

திருமாலின் வாகனமான கருடனுக்கு வெப்பு நோய் ஏற்பட்டது. இதனால் கருடன் திருமாலுடன் இங்கு வந்து மயூரநாதரை வணங்க அந்நோய் தீரப்பெற்றது. அப்போது சிவபெருமான், திருமாலை நோக்கி ‘இன்று முதல் நீவீர் லட்சுமி நாராயணராக மேற்கு திசையில் அமர்வாய்’ என்றனர். அதேபோல் லட்சுமிநாரயணர் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதேபோல் தக்கன், ராமபிரான், மன்மதன், இயமன், வீரபத்திரர், வேதியர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து மயூரநாதரை வணங்கி தங்களது சாபங்களில் இருந்து விடுபட்டனர்.  இதனால் பக்தர்கள் தங்களது முன்பிறவி செய்த பாவங்கள், இந்த பிறவியில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களில் இருந்து விடுபட மயூரநாதரை வணங்கி சாபவிமோசனம் பெறுகின்றனர்.

மேலும் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் இத்தலத்திற்கு வந்து மயூரநாதரையும், சவுந்தரநாயகி அன்னையையும் தரிசனம் செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பிறகு சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

The post திருமண வரம் அருளும் மயூரநாதர் appeared first on Dinakaran.

Related Stories: