சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழையானது இன்று காலை வரை ஓயவில்லை. சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை மேகங்கள் சூழ்ந்துள்ளதால் சென்னை கடற்கரை சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர். தொடர்மழையால் சென்னையில் பகலில் இருள் சூழ்ந்துள்ளது.
மழை குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, பகல் 12 மணிக்கே மாலை 6 மணி போல் இருப்பதாகவும், வாகனங்களை இயக்குவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சென்னையில் உள்ள சுரங்கபாதைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காமல் உள்ளது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து சீராக உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post காரிருள் சூழ்ந்தது!: சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் மழை; முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்லும் வாகன ஓட்டிகள்..!! appeared first on Dinakaran.
