பைக் சாகசம் செய்த பிரபல யு-டியூபர் டிடிஎப் வாசன் சேனலை முடக்க கோரி வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

சென்னை: பிரபல யு-டியூபர் டிடிஎப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் பைக்கில் வீலிங் சாகசம் செய்ய முயற்சித்தபோது, விபத்தில் சிக்கி காயமடைந்தார். இதையடுத்து, 5 பிரிவுகளில், பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, டிடிஎப் வாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 45 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு டிடிஎப் வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட்டு வருகிறார். முன்னதாக டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு தடை செய்து போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க கோரி பாலுசெட்டிசத்திரம் போலீசார், காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1ல் மனு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த டிடிஎப் வாசனிடம் சம்மன் அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1ல் நீதிபதி இனியா கருணாகரன் முன்பு, டிடிஎப் வாசன் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், யு-டியூப் சேனலை முடக்குவது சம்பந்தமான மனு மீது டிடிஎப் வாசன் வரும் 29ம்தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், என நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார். மேலும் விபத்தில் சிக்கிய வாகனம் திரும்ப பெற கோருதல் சம்பந்தமாகவும், டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவும் வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

 

The post பைக் சாகசம் செய்த பிரபல யு-டியூபர் டிடிஎப் வாசன் சேனலை முடக்க கோரி வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: