புதுடெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வைத்தார். உரிய காரணம், விளக்கம் எதையும் தெரிவிக்காமல் மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலதாமதப்படுத்துவது சட்டவிரோதம் என உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நவம்பர் 10ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு நிறைவேற்றும் மசோதா மீது உடனுக்குடன் முடிவெடுக்காமல் காலதாமதப்படுத்துவது ஏன்? ஆளுநருக்கு சில அதிகாரங்கள் இருந்தாலும் மாநில அரசின் அதிகாரத்தை ஆளுநர் கையிலெடுத்துக் கொள்ளக் கூடாது. மாநில அரசுகள் உச்சநீதி மன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்த 10 மசோதாக்களை கடந்த 13ம் தேதி அரசுக்கே திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அன்று மாலையே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் கேரள அரசு நிறைவேற்றிய 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆரிஃ ப் முகமது கான் காலதாமதப்படுத்தி வருவதாக கேரள அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா ஆளுநர்கள் மீது அந்தந்த மாநில அரசுகள் தாக்கல் செய்த வழக்குகள் மீது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
The post மசோதாக்களுக்கு ஒப்புதல் தராத விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை appeared first on Dinakaran.
