ஜம்முவில் 18 மணி நேரம் துப்பாக்கி சண்டை 5 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: வீடு தீப்பற்றியதால் வெளியே வந்தவர்களை ராணுவம் தீர்த்துக்கட்டியது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் சுமார் 18 மணி நேரம் நடத்திய துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு விரைந்தனர். நெஹாமா கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதன் காரணமாக தேடுதல் நடவடிக்கை துப்பாக்கி சண்டையாக மாறியது. வீரர்களும் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். 18 மணி நேரம் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீடு தீப்பற்றி எரிந்தது. இதனால் தீவிரவாதிகள் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். வெளியே வந்த அவர்கள் தப்பி செல்வதற்கு முயன்றனர். இந்நிலையில் வீரர்கள் உரிய நேரத்தில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சடலங்கள் டிரோன் மூலமாக கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட 5 பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். கொல்லப்பட்டவர்கள் சமீர் அகமத், யாசிர் பிலால் பாட், டேனிஷ் அகமத் தோகர், ஹன்சுல்லா யாகூப் ஷா மற்றும் உபேத் அகமத் பாடர் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ரஜோரி மாவட்டம் குல்லர்-பெரோட் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில், தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

The post ஜம்முவில் 18 மணி நேரம் துப்பாக்கி சண்டை 5 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: வீடு தீப்பற்றியதால் வெளியே வந்தவர்களை ராணுவம் தீர்த்துக்கட்டியது appeared first on Dinakaran.

Related Stories: