தெலுங்கானா பிஆர்எஸ் எம்எல்ஏ வீட்டில் ஐடி ரெய்டு

நல்கொண்டா: தெலுங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு வருகிற 30ம் தேதி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் மாநிலத்தில் இருக்கும் முன்னாள், இன்னாள் எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் பிஆர்எஸ் கட்சியின் தலைவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவ்வபோது தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 13ம் தேதி தற்போது கல்வித்துறை அமைச்சராக இருக்கும் சபிதா இந்திரா ரெட்டியின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தநிலையில் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏ.வான நல்லமோத்து பாஸ்கரராவ் வீட்டிற்கு இன்று காலை வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இவரது அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இவர் மிரியாலகுடா சட்டபேரவை தொகுதியில் இருந்து 2 முறை எம்எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவராவார். அதே தொகுதியில் தற்போது மீண்டும் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். தெலங்கானாவில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு நடைபெற்று வருவது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post தெலுங்கானா பிஆர்எஸ் எம்எல்ஏ வீட்டில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: