குமாரசாமி வீட்டருகே ஒட்டப்பட்ட ‘மின்சார திருடன்’ போஸ்டரால் பரபரப்பு

பெங்களூரு: முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வீட்டருகே, ’மின்சார திருடன்’ என அவரை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமி வீடு, தீபாவளியையொட்டி மின்விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த மின்விளக்குகளுக்கு அருகிலுள்ள மின்கம்பத்திலிருந்து சட்டவிரோதமாக மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்த பெஸ்காம் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், சட்டவிரோதமாக மின் இணைப்பு கொடுத்து மின்சாரத்தை திருடியதற்காக இந்திய மின்சார சட்டத்தின் 135வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தன்னிலை விளக்கம் அளித்த குமாரசாமி, தனக்கு தெரியாமல் தனியார் நிறுவனத்தினர் மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுத்துவிட்டதாக விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், குமாரசாமியின் ஜே.பி.நகர் வீட்டருகே, அவரை ’மின்சார திருடன்’ என விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக புகார்கள் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த போஸ்டர்களை அகற்றினர்.

The post குமாரசாமி வீட்டருகே ஒட்டப்பட்ட ‘மின்சார திருடன்’ போஸ்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: