கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக புகார் திரிணாமுல் பெண் எம்.பி. பதவி பறிக்க நாடாளுமன்ற நெறிமுறை குழு பரிந்துரை: சபாநாயகரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

புதுடெல்லி: கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி. மஹுவா மொய்த்ராவின் பதவியை பறிக்க நாடாளுன்ற நெறிமுறை குழு பரிந்துரைத்துள்ளது. நெறிமுறை குழு உறுப்பினர்களில் 6 பேர் அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாகவும் 4 பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்துள்ளனர். இது தொடர்பான அறிக்கை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்பி.யானவர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா.

மக்களவையில் அதிரடி கேள்விகள் கேட்பது, விவாதங்களில் அனல் தெறிக்க பேசுவது என குறுகிய காலத்தில் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தவர். இவர் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, நாடாளுமன்றத்தில் அதானி குழுமம், பிரதமர் மோடி குறித்து கேள்வி கேட்டதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மொய்த்ரா, ஹிராநந்தானி மறுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொய்த்ரா மீது நாடாளுமன்ற நெறிமுறை குழு நடவடிக்கை எடுக்க கோரி நிஷிகாந்த் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பினார்.

இது குறித்து நாடாளுமன்ற நெறிமுறை குழு உடனடியாக விசாரிக்க சபாநாயகர் உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணையில் பாஜ எம்பி. நிஷிகாந்த் துபே, மொய்த்ராவின் முன்னாள் நண்பரும், வழக்கறிஞருமான ஜெய் அனந்த் தெஹ்த்ராய் ஆகியோர் அக்டோபர் 27ம் தேதி நாடாளுமன்ற நெறிமுறை குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.விசாரணைக்காக ஆஜரான மஹுவா மொய்த்ராவிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான கேள்வி எழுப்பியதால் அவர் விசாரணையின் பாதியில் வெளியேறினார்.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற நெறிமுறை குழு 500 பக்க வரைவு அறிக்கையை தயாரித்தது. இதில், மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது நேற்று நெறிமுறை குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாக நெறிமுறை குழுவின் தலைவர் வினோத்குமார் சோன்கர் உள்பட 6 உறுப்பினர்களும், எதிர்ப்பு தெரிவித்து 4 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். நெறிமுறை குழுவின் வரைவு அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மொய்த்ரா, ஹிராநந்தானி இடையே நடந்த பணப் பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்த ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சிபிஐ, அமலாக்கப் பிரிவினர் தனித்தனியே வழக்கு பதிந்து மொய்த்ராவிடம் விசாரணை நடத்தக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது முதல் முறை: மக்களவை முன்னாள் தலைமை செயலர் ஆச்சாரி கூறுகையில், “நாடாளுமன்ற நெறிமுறை குழு எம்பி. ஒருவரை பதவி நீக்க பரிந்துரைப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு, 2005ம் ஆண்டு இதே போன்றதொரு குற்றச்சாட்டில் 11 எம்பி.க்களை பதவி நீக்க மாநிலங்களவை நெறிமுறைகுழு மற்றும் மக்களவை விசாரணை குழு பரிந்துரைத்திருந்தது. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நெறிமுறை குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்த பின்பு அதன் மீதான விவாதம் மக்களவையில் நடைபெறும். அதைத் தொடர்ந்து, பதவி நீக்கம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படும்,” என்று தெரிவித்தார்.

* ஆதரித்தது காங். எம்பி. அல்ல: பாஜ எம்பி.தான்
மொய்த்ராவை பதவி நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்த நெறிமுறை குழு உறுப்பினர்களில் காங்கிரஸ் எம்பி. பிரனீத் கவுரும் ஒருவர். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் மனைவியான அவர் கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் பாஜ.வில் இணைந்தார். ஆனால் அவர் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் எம்பி.யாக நீடிக்கிறார்.

* உரிமை மீறல் பிரச்னை
நாடாளுமன்ற நெறிமுறை குழுவின் ரகசியமான வரைவு அறிக்கை தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தின் கைகளில் கிடைத்திருப்பது சிறப்புரிமை மீறலாகும் என்று அதன் நகலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மொய்த்ரா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், அதில் தனது முந்தைய கடிதத்துக்கு பதில் கிடைக்காததால் டிவிட்டரில் அதன் நகலை அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

* 15 பேர் கொண்ட நாடாளுமன்ற நெறிமுறை குழுவில் அதன் தலைவர் வினோத்குமார் சோன்கர் உள்பட 7 பாஜ எம்பி.க்கள், 3 காங்கிரஸ் எம்பி.க்கள் மற்றும் பிஎஸ்பி, சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த தலா ஒரு எம்பி.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
* பதவி நீக்கத்துக்கு ஆதரவாக அபராஜிதா சாரங்கி, ராஜ்தீப் ராய், சுமேதானந்த் சரஸ்வதி, பிரனீத் கவுர், வினோத்குமார் சோன்கர், ஹேமந்த் கோட்சே ஆகிய 6 பேர் வாக்களித்தனர்.
* பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டேனிஷ் அலி, வைத்திலிங்கம், பிஆர். நடராஜன், கிரிதாரி யாதவ் ஆகியோர் வாக்களித்தனர்.

* அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் மக்களவைக்கு வருவேன்: மஹுவா
கேள்விக்கு பணம் ‘‘சர்ச்சையில் மக்களவை நெறிமுறைகள் குழுவின் எம்பி பதவி பறிப்பு பரிந்துரை பற்றி மஹுவா மொய்த்ரா கூறுகையில்,’இந்த மக்களவையில் என்னை வெளியேற்றினாலும், அடுத்த மக்களவைக்கு நான் பெரிய வெற்றியுடன் மீண்டும் வருவேன். இது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட போட்டி முடிவு. இது எந்த ஆச்சரியமும் அல்லது இதனால் எந்த விளைவும் ஏற்படாது. ஆனால் நாட்டிற்கான பெரிய செய்தி என்னவென்றால், இந்தியாவைப் பொறுத்தவரை இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மரணம்.

பாஜ -அதானி உறவை அதிக வீரியத்துடன் தொடர்ந்து கேள்வி எழுப்புவதிலிருந்தும், அம்பலப்படுத்துவதிலிருந்தும் இந்த முடிவு என்னைத் தடுக்காது. முதலில், இது ஒரு பரிந்துரை மட்டுமே, இப்போது எதுவும் நடக்கவில்லை. அவர்கள் அதை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளட்டும். இது உண்மையில் என்னை ஒன்றும் செய்யாது. இது என்னை மூடிவிட முடியாது. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவர்கள் செய்த கேலிக்கூத்தை பாஜ முழு நாட்டிற்கும் காட்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முதலில், அவர்கள் என்னை வெளியேற்றட்டும். அதன்பின் எனது அடுத்த நடவடிக்கைகளை பின்னர் அறிவிப்பேன்’ என்றார்.

* இரண்டரை நிமிடம் நடந்த கூட்டம்
மொய்த்ராவை பதவி நீக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்த பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பி டேனிஷ் அலி, ‘’நெறிமுறை குழு தலைவர் வினோத் சோன்கர் உள்பட அனைத்து பாஜ எம்பிக்களும் மக்களவை நெறிமுறை குழுவின் நடைமுறை விதிகளை மீறினர். தலைவர் வந்த இரண்டரை நிமிடத்தில் கூட்டம் முடிந்து விட்டது,’’ என்று குற்றம் சாட்டினார்.

The post கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக புகார் திரிணாமுல் பெண் எம்.பி. பதவி பறிக்க நாடாளுமன்ற நெறிமுறை குழு பரிந்துரை: சபாநாயகரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Related Stories: