ஊஞ்சல் உற்சவம் விழா நிறைவு: ஸ்ரீரங்கம் கோயிலில் தீர்த்தவாரி கோலாகலம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று காலை தீர்த்தவாரி கோலாகலமாக நடந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. இங்கு நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் கடந்த 1ம் தேதி தொடங்கியது. 7ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கோயில் கொட்டார வாசலில் நெல்லளவு, 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். இரவு 8.15 மணிக்கு தொடங்கி இரவு 9.15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

8ம் நாளான நேற்று நம்பெருமாள் முத்து கிரீடம், ரத்தின காதுகாப்பு, ரத்தின அபயகஸ்தம், நெல்லிக்காய் மாலை, பவளமாலை, காசுமாலை, அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். விழாவின் நிறைவு நாளான இன்று (9ம்தேதி) காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்றுடன் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவு பெறுகிறது.

The post ஊஞ்சல் உற்சவம் விழா நிறைவு: ஸ்ரீரங்கம் கோயிலில் தீர்த்தவாரி கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: