கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்ட பணத்தை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை!

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்ட பணத்தை எதிர்வரும் தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு பாபநாசம் எம்எல்ஏ எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது; இந்த ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2022-23 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதியுள்ள விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

அதனடிப்படையில்,1.42 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.253.70 கோடியை விடுவித்து அறிவிப்பு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ள இந்த தொகையினை தஞ்சாவூர் மாவட்டத்தில் தகுதியுள்ள கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்பதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே இந்த தொகையை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்ட பணத்தை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை! appeared first on Dinakaran.

Related Stories: