மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து சரிவால் கிலோ ரூ.35க்கு விற்பனை

 

பொள்ளாச்சி, நவ.9: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால், ஒரு கிலோ ரூ.35வரை விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில், வடக்கிபாளையம்,நெகமம்,கோமங்கலம்,கோட்டூர்,சமத்தூர்,ராமபட்டினம்,கோபாலபுரம், சூலக்கல்,கோவில்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நாட்டு தக்காளி சாகுபடி அதிகளவில் உள்ளது.

இந்த ஆண்டில், தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி தக்காளி ஜூன் மாதம் துவக்கத்திலிருந்து சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரித்ததையடுத்து, மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடை தீவிரமாகி, மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. தக்காளி வரத்து அதிகரிப்பால்,பல நாட்களாக ஒரு கிலோ ரூ.8 முதல் அதிகபட்சமாக ரூ.12 வரை விற்பனையானது.தொடர்ந்து ஒரு மாதமாக தக்காளி விலை குறைவாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஒருவாரத்துக்கு மேலாக மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் தக்காளி வரத்து குறைவாக இருந்தது.

இதனால், விலை ஏற்றமடைந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது மொத்த விலைக்கு ரூ.30க்கும் சில்லரை விலைக்கு ரூ.35க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட 14கிலோ எடைகொண்ட தக்காளி பெட்டி ரூ.360 முதல் ரூ.450 வரை விலை போனது. ஒரு வாரத்தில் ரூ.20 வரை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து சரிவால் கிலோ ரூ.35க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: