கற்பக விநாயகா பொறியியல், தொழில் நுட்ப கல்லூரி சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான வினாடி – வினா, அறிவியல் கண்காட்சி

மதுராந்தகம்: கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில், அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே வினாடி – வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சின்ன கொளம்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில், அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், இன்ஸ்பயர் 2023 என்ற தலைப்பிலான வினாடி – வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி, சரோஜா ரகுபதி கலையரங்கில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் காசிநாத பாண்டியன், கல்லூரி டீன் சுப்பாராஜ், துணை முதல்வர் சிவக்குமார், துறை தலைவர்கள் தினேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவியரின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியினை அறிவியல் விஞ்ஞானி சாலமன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டார். கல்லூரி மாணவ – மாணவிகளும், மாணவர்களின் பெற்றோரும், ஆசிரியர்களும் பார்வையிட்டனர்.

இந்த அறிவியல் கண்காட்சியில் காஞ்சிபுரம் பில்பாங் இன்டர்நேஷனல் பள்ளி, பெருநகர் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி, காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இதனைத்தொடர்ந்து வினாடி – வினா தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் ராஜூ சாரதி கலந்துகொண்டு, வினாடி – வினா இறுதிப் போட்டியை நடத்தினார். இதில், மரக்காணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி இரண்டாவது இடமும், திருக்கழுக்குன்றம் அருணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடமும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி மாணவ – மாணவியருக்கு கற்பக விநாயகா கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசு தொகை, கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post கற்பக விநாயகா பொறியியல், தொழில் நுட்ப கல்லூரி சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான வினாடி – வினா, அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: