நாடாளுமன்ற நெறிமுறை குழு விசாரணை பாதியில் வெளியேறினார் மஹுவா மொய்த்ரா: கண்ணியமற்ற கேள்வி கேட்டதாக புகார்

புதுடெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான விசாரணையில் பாஜ எம்.பி நிஷிகாந்த் துபே, மொய்த்ராவின் முன்னாள் நண்பரும், வழக்கறிஞருமான ஜெய் அனந்த் தெஹ்த்ராய் ஆகியோர் அக்டோபர் 27ம் தேதி நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இந்த நிலையில், மஹுவா நேற்று நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, “ஜெய் அனந்த் தெஹத்ராயுடனான தனிப்பட்ட உறவை முறித்து கொண்டதால் முன்விரோதத்தால் தன் மீது தேவையற்ற குற்றச்சாட்டை ஜெய் அனந்த் சுமத்தியுள்ளதாக” மொய்த்ரா விளக்கம் அளித்தார். அப்போது நெறிமுறை குழு தலைவரும், பாஜ நாடாளுமன்ற உறுப்பினருமான விநோத்குமார் சோன்கர்,கண்ணியமற்ற கேள்விகளை எழுப்பியதாக கூறி மஹுவா வௌியேறினார். அவருடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் வௌியேறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் உறுப்பினரான உத்தம் குமார் ரெட்டி, “குழு தலைவர் வினோத்குமார் மொய்த்ராவிடம் கண்ணியமற்ற, நெறியற்ற கேள்விகளை கேட்டார்” என்று குற்றம்சாட்டினார். மஹுவாவின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜ நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, “ நெறிமுறை குழு பற்றி தவறான பிம்பத்தை உருவாக்க மஹுவா முயற்சிக்கிறார்” என்று கூறினார்.

The post நாடாளுமன்ற நெறிமுறை குழு விசாரணை பாதியில் வெளியேறினார் மஹுவா மொய்த்ரா: கண்ணியமற்ற கேள்வி கேட்டதாக புகார் appeared first on Dinakaran.

Related Stories: