சுதந்திரம் பெற்ற அமிர்த காலம் மக்கள் இயக்கமாக மாறி விட்டது: பிரதமர் மோடி பெருமிதம்


புதுடெல்லி: சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு கொண்டாட்டம் மக்கள் இயக்கமாக மாறிவிட்டது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு கொண்டாட்டம் அமிர்த கால கொண்டாட்டமாக 1000 நாட்கள் நடந்தது. இதை முன்னிட்டுநேற்று டெல்லியில் உள்ள கடமையின் பாதையில் பிரமாண்ட விழா நடந்தது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் அங்கு கொண்டு செல்லப்பட்டது. டெல்லி விஜய் சவுக் முதல் கடமையின் பாதை வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, கிஷண் ரெட்டி, அர்ஜூன் ராம் மெக்வால், அனுராக் தாக்கூர், மீனாட்சி லெகி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை மக்களை ஒன்று சேர்த்தது. அதேபோன்று சுதந்திர கொண்டாட்டத்தின் அமிர்த கால விழா மக்கள் இயக்கமாக மாறி புதிய வரலாற்றை உருவாக்கியது. இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், கடமையின் பாதை ஒரு வரலாற்று நிகழ்வைக் காண்கிறது.

மகாத்மா காந்தியின் உத்வேகத்துடன், சபர்மதி ஆசிரமத்தில் 2021 மார்ச் 21ல் தொடங்கிய அமிர்தகால விழா இன்று நிறைவடைகிறது. இந்த 1,000 நாள் காலப்பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவது, வளர்ந்த இந்தியாவுக்கான வரைபடத்தை உருவாக்குவது, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது, சந்திரயான் -3, ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுகளில் தலா 100 பதக்கங்களை வென்றது, புதிய நாடாளுமன்ற கட்டிடம், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா போன்ற பல சாதனைகளை நாடு கண்டது. 2047 வரை இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்.

நமது முயற்சிகளை அதிகரிக்க வேண்டும், அனைவரின் பங்களிப்பும் இதில் முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், “இந்த நூற்றாண்டின் அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும்.

சர்தார் வல்லபாய் படேலிடமிருந்து உத்வேகம் பெற்று, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளமான மற்றும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும் காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கப்படும் என்று யாராவது நினைத்திருப்பார்களா? ஆனால் இன்று காஷ்மீருக்கும் நாட்டிற்கும் இடையேயான 370-வது பிரிவு என்ற சுவர் இடிந்து விழுந்துள்ளது. சர்தார் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். இன்று எங்கிருந்தாலும் அங்கிருந்து நம்மை ஆசீர்வதிப்பார்,” என்று கூறினார்.

* என்னுடைய பாரதம்: புதிய தளம் தொடக்கம்
இந்த விழாவில் என்னுடைய பாரதம் என்ற புதிய தளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு நாடு முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணை அள்ளி தனது நெற்றியில் அவர் பூசினார். அதன்பின்னர் பிரதமர் மோடி கூறுகையில்,’ இந்த புதிய தளம் 21ம் நூற்றாண்டில் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகிக்கும். இந்த வரலாற்று நிகழ்வை வரும் தலைமுறையினர் நினைவுபடுத்துவார்கள். என்னுடைய பாரதம் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசின் கவனத்தை ஈர்க்கவும், இளைஞர்களை வளர்ச்சியின் அங்கங்களாக மாற்றவும் உதவும்’ என்றார்.

The post சுதந்திரம் பெற்ற அமிர்த காலம் மக்கள் இயக்கமாக மாறி விட்டது: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: