`நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்: நெல்லையில் 8 கிலோ மீட்டர் `சிறப்பு நடை பாதை’ தயார்

நெல்லை: பொதுமக்களின் ஆரோக்கிய வாழ்விற்காக நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொள்ள உள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் வருகிற நவம்பர் 4ம்தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதே தினத்தில் 38 மாவட்டங்களிலும் திட்டம் தொடங்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோ மீட்டர் தூர இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் முதற்கட்டமாக பாளையங்கோட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே உதயா நகர், தாமிரபதி காலனி, ஜெபா கார்டன் உள்ளிட்ட பகுதி சாலைகளில் நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் திரும்ப 4 கிலோமீட்டர் தூரம் நடந்து புறப்பட்ட இடத்திற்கு வந்து சேரும் வகையில் \”நடப்போம் நலம் பெறுவோம்\” திட்டத்திற்கான சுகாதார நடைபயிற்சி சாலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன் ஒருங்கிணைப்பாளராக கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி, போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், எம்பி., எம்எல்ஏ., மேயர் துணை மேயர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம்பெற்று இருப்பார்கள். இந்த நடைபயிற்சி சாலையில் மாநகராட்சி சார்பில் நடப்பதற்கு ஏற்ற வழி பாதை, சுகாதார வளாகம், குடிநீர் வசதி, மின்விளக்கு, ஓய்வு எடுக்க கல் இருக்கைகள், நடந்து செல்லும் தூரத்தை காட்டும் கிலோ மீட்டர் கல்தூண் வழிகாட்டிகள், நடப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள உயர் அதிகாரிகளும், உறுப்பினர்களும் நடை பயிற்சியில் பங்கேற்பார்கள். அன்றைய தினம் நடை பயிற்சி பாதையில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற மருத்துவ பரிசோதனைகளையும் இலவசமாக செய்வார்கள்.

இந்தத் திட்டம் குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறுகையில், \”நடப்போம் நலம் பெறுவோம்\” என்ற தமிழக அரசின் சுகாதார நடை பயிற்சி திட்டம் பொதுமக்கள் மத்தியில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படுகிறது. உடல் பருமன், நடைப்பயிற்சி இன்மையால் ஏற்படும் நோய்கள் மற்றும் உயிரிழப்பு போன்றவைகளை தவிர்க்க இந்தத் திட்டம் வகை செய்கிறது. இந்த நடைபயிற்சி பாதையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 8 கிலோ மீட்டர் தூரம் என்பது சராசரியாக பத்தாயிரம் அடி தூரம் நடப்பது ஆகும். இந்த குறிப்பிட்ட சுகாதார நடை பயிற்சி சாலையில் மட்டுமின்றி பொதுமக்கள் அவர்களது பகுதியில் உள்ள இடங்களிலும் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை இத்திட்டம் வலியுறுத்துகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெறுகிறது என்றார்.

The post `நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்: நெல்லையில் 8 கிலோ மீட்டர் `சிறப்பு நடை பாதை’ தயார் appeared first on Dinakaran.

Related Stories: