நிலுவை தொகை வழங்காததால் பாலகொலா மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை மகா சபை கூட்டம் ஒத்தி வைப்பு

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள பாலகொலா மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால் மகாசபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இவர்கள், அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையிலான பரப்பளவு கொண்ட தேயிலை தோட்டங்களை வைத்துள்ளனர். இவர்கள், தங்களது தேயிலை தோட்டங்களில் இருந்து பறிக்கும் பசுந்தேயிலையை கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

இதற்காக, நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனம் மூலம் 16 தேயிலை தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த தேயிலை தொழிற்சாலைகளில் அந்த தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ேதயிலை விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையை அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர்.

மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்த கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் அங்கத்தினர்களாகவும் உள்ளனர்.விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு மாதத்திற்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு,அந்த தேயிலைக்கு மாதந்தோறும் தொழிற்சாலை மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுவது வழக்கம்.கடந்த சில ஆண்டுகளாக நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தங்களது தேயிலை தோட்டங்களில் பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு முறையாக கூலி கொடுக்க கூட முடியாமல் திணறி வருகின்றனர். இதனால், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள பாலகொலா மகாலிங்கா தேயிலை தொழிற்சாலையில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை விவசாயிகள் வழங்கிய தேயிலைக்கான நிலுவைத் தொகை இதுவரை வரையில் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை தொழிற்சாலை நிர்வாகம் வழங்கவில்லை.

இந்நிலையில், நேற்று மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் சிறப்பு மகா சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மூத்த உறுப்பினர் ஜோகி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், நிலுவைத் தொகை ரூ.50 லட்சத்தை உடனடியாக தொழிற்சாலை நிர்வாகம் வழங்க வேண்டும். இந்த தொகை வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் வழங்கிட வேண்டும். நிலுவைத் தொகையை வழங்கிய பின்னர் மகா சபை கூட்டம் நடத்துவது எனவும், அதுவரை மகா சபை கூட்டத்தை ஒத்தி வைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post நிலுவை தொகை வழங்காததால் பாலகொலா மகாலிங்கா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை மகா சபை கூட்டம் ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: