காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்தார் ராகுல்: புல்வாமா தாக்குதல், மணிப்பூர் கலவரம் குறித்து உரையாடல்

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார்கள். காஷ்மீர் மாநிலத்தின் கவர்னராக பா.ஜ அரசால் நியமிக்கப்பட்டவர் சத்யபால் மாலிக். அங்கு 2019 பிப்ரவரி 14ல் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானது குறித்து அவர் பகிரங்கமாக மோடி அரசை குற்றம் சாட்டினார். இதனால் பா.ஜவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தநிலையில் அவரை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சந்தித்து உரையாடினார். இந்த 28 நிமிட உரையாடல் ராகுலின் இணையதள பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில் புல்வாமா தாக்குதல், மணிப்பூர் கலவரம், காஷ்மீர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து உரையாடி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:

ஜம்மு-காஷ்மீரில் தற்போது மீண்டும் கிளர்ச்சி உருவாகி வருகிறது. ரஜோரி மாவட்டம் மற்றும் பள்ளத்தாக்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் பற்றிய எனது கருத்து என்னவென்றால், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் நீங்கள் அமைதியாக வைத்து இருக்க முடியாது. அந்த மக்களின் இதயங்களை வெல்வதற்கு நான் பரிந்துரைக்கிறேன். அதன் பிறகு நீங்கள் எதையும் செய்யலாம். அங்குள்ள மக்கள் அன்பானவர்கள். காஷ்மீர் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட அளவுக்கு, 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது அதிக அளவு மக்களைப் பாதிக்கவில்லை. எனவே இப்போது காஷ்மீரில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும். அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறேன். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் இதுபற்றி அப்போது உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ராகுல்: எனது இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது, ​​ஜம்முவில் மாநிலம் யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்பட்டதால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதை நான் நேரில் பார்த்தேன். சத்யபால் மாலிக்: காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து ஒன்றிய அரசிடம் பலமுறை கேட்டுள்ளேன். ஆனால் வழக்கமான பதில்தான் அளிக்கப்படும்.

ராகுல்: 2019 புல்வாமா தாக்குதல் நடந்தது எப்படி? சத்யபால் மாலிக்: அந்த நேரத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் தாக்குதலுக்கு காரணம் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக தாக்குதலைப் பயன்படுத்தினர். இந்த சம்பவத்திற்குப் பிறகு சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வாதிட்டதால், அந்த நேரத்தில் இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

ராகுல்: அங்கு இவ்வளவு வெடிபொருட்கள் எப்படி வர முடியும்?. சத்யபால்மாலிக்: இது பாகிஸ்தானில் இருந்து வந்தது. ஆனால் கண்டுபிடிக்கப்படவில்லை.

ராகுல்: மேகாலயா ஆளுநராக இருந்த அனுபவம் எப்படி?. மணிப்பூரில் இனக்கலவரத்தின் பின்னணி என்ன? சத்யபால் மாலிக்: மணிப்பூரில் நடந்தது அரசின் ஒட்டுமொத்த தோல்வி. அங்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை. அவரை பதவியை விட்டு அகற்றவும் இல்லை.

ராகுல்: மணிப்பூருக்கு நான் சென்ற போது ​​மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் காந்தியவாதம் என்ற இரு சித்தாந்தங்களால் இன்று நாடு பிளவுபட்டு நிற்கிறதா?

சத்யபால்மாலிக்: முற்போக்கான இந்துத்துவ சித்தாந்தத்துடன் நாடு முன்னேறும் போதுதான் இந்தியா வளரும். காந்தியும் இதைச் சொல்லியிருக்கிறார். காந்தியை விட இந்த நாட்டை யாரும் நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. அதே சமயம் முற்போக்கான இந்துத்துவம் இல்லாமல், நாடு வளராது, சிதைந்துவிடும். அனைவரும் ஒற்றுமையுடன் அமைதியாக வாழ வேண்டும். இவ்வாறு உரையாடல் நடந்தது.

The post காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்தார் ராகுல்: புல்வாமா தாக்குதல், மணிப்பூர் கலவரம் குறித்து உரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: