நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரயிலுக்கு ஆயுத பூஜை

ஊட்டி: நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரயிலுக்கு நேற்று ஆயுத பூஜை போடப்பட்டது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு நாள்தோறும் மலை ரயில் இயக்கப்படுகிறது. கல்லார் முதல் குன்னூர் வரை பல் சக்கரத்தால் அமைந்துள்ள ரயில் பாதையில் பயணிக்கும் இந்த ரயிலின் இன்ஜின் வழக்கமான முறையில் இல்லாமல், பின் இருந்து முன்னோக்கி தள்ளும் வகையில் உள்ளது.

அதுமட்டுமின்றி அடர்ந்த வனப்பகுதி நடுவே பயணித்து செல்லும் இந்த ரயில் கற்பனைக்கு எட்டாத வகையில் அமைக்கபட்டுள்ள குகைகள், அடர்ந்த காடு, அதில் உள்ள வன உயிரினங்கள் என கொட்டி கிடக்கும் இயற்கை அழகினை ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த மலை ரயிலுக்கு ஆண்டுதோறும் ஆயுத பூஜையின்போது குன்னூர் ரயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த பூஜையின்போது மலை ரயில் இன்ஜின்கள் மற்றும் பணிமனை ஆகியவைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று குன்னூர் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.

பூஜையின்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மலை ரயில் இன்ஜின்களுக்கு பூஜைகள் போடப்பட்டன. தொடர்ந்து மலை ரயில் பாதை மற்றும் பணிமனையில் உள்ள பொருட்களுக்கு பூஜை செய்யப்பட்டது. இதில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

The post நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி மலை ரயிலுக்கு ஆயுத பூஜை appeared first on Dinakaran.

Related Stories: