விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றபோது கப்பல் ஊழியர் வீட்டில் திருட்டு

 

குமாரபுரம், அக்.23: விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றபோது தக்கலையை சேர்ந்த கப்பல் ஊழியரின் வீட்டின் ஜன்னலை உடைத்து துணிகர திருட்டு சம்பவம் நடந்துள்ளது. குமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சியை சேர்ந்தவர் அருண் (37). வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சேலத்தை சேர்ந்த ஜூலி (32) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உண்டு.

தற்போது அருண் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக மனைவியின் சொந்த ஊரான சேலத்துக்கு அருண் குடும்பத்துடன் சென்று விட்டார். இதற்கிடையே அருணின் தம்பி அனீஷ் நேற்று காலை, அருணுடைய வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பணம் ரூ.60 ஆயிரத்தை காணவில்லை. இது குறித்து தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதேபோல் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

இரவில் அருணின் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை நெம்பி உடைத்துவிட்டு உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு நடந்தது குறித்து சேலத்திற்கு சென்றுள்ள அருணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருண் வந்த பிறகுதான் வீட்டில் நகைகள், மேலும் பொருட்கள் திருட்டு போயுள்ளதா? என்ற விவரம் தெரியவரும்.

The post விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றபோது கப்பல் ஊழியர் வீட்டில் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: