இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போருக்கு மத்தியில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் பலியான மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்

புதுடெல்லி: ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஒன்றிய அரசு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசிடம் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது, காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்தது தொடர்பாக இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்புவதாக உறுதி அளித்தார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பிற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் 13வது நாளாக நேற்றும் நீடித்தது.

இப்போரில் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளைப் போல இஸ்ரேலுக்கு இந்தியா முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுவரை இப்போரில் காசாவில் 3,700க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் பலியாகி உள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அங்கு உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் எஞ்சியிருக்கும் மக்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையே, காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் காசாவின் பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் பலியான மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்புவோம் என அதிபர் முகமது அப்பாசிடம் தெரிவித்துள்ளேன். மேலும், பிராந்தியத்தில் தீவிரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலை குறித்து எங்களின் ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து கொண்டோம்.

இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கையை மீண்டும் வலியுறுத்தினேன்’’ என குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீன செய்தி நிறுவனம் வஃபா வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமர் மோடியிடமிருந்து அதிபர் முகமது அப்பாசுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் இரு தலைவர்களும் பாலஸ்தீனத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குறித்து உடனடி முடிவு எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனர்.

ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் காசா பகுதியில் நடந்து வரும் முற்றுகையை நிறுத்துவதற்கான அவசரத் தேவையையும், அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவி, மருத்துவப் பொருட்கள், உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அப்பாஸ் வலியுறுத்தினார்’ என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, காசாவில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பது மிகவும் சவாலான பணியாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அளித்த பேட்டியில், ‘‘காசாவிலிருந்து யாரையும் மீட்பது மிகவும் சிக்கலாக உள்ளது. சூழல் சாதகமாக மாறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம். இதுவரை காசாவில் இந்தியர்கள் யாரும் பலியாகவில்லை. காசாவில் 4 இந்தியர்களும், மேற்கு கரையில் ஒரு இந்தியரும் உள்ளனர்’’ என்றார். இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவின் தெற்கு பகுதியிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

The post இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போருக்கு மத்தியில் பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் பலியான மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் appeared first on Dinakaran.

Related Stories: