மதுரையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்.. தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த மாவட்ட ஆட்சியர்..!!

மதுரை: மதுரையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். தமிழகம் முழுவதும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகங்களில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வாரந்தோறும் திங்கட்கிழமை 9.30 மணி முதல் பிற்பகல் வரை இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டங்களில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனு எந்த துறையைச் சார்ந்தது என்று ஆட்சியர் பார்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசம் அந்த மனு அளிக்கப்பட்டு தீர்வு காண அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மூலம் பெறப்பட்ட மனுக்களை அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து தீர்வு காணுவதற்காக இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதற்காக வரவேண்டிய அதிகாரிகள் காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வர வேண்டும். ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் காலை 10 மணி மற்றும் அதற்கு மேற்பட்ட நேரத்திலும் பணிக்கு வந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா, குறை தீர்க்கும் கூட்ட அரங்கிற்குள் உள்ளே வரக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் அதிகாரிகள் உள்ளே வர விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் வரவேற்று பாராட்டினர்.

The post மதுரையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்.. தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த மாவட்ட ஆட்சியர்..!! appeared first on Dinakaran.

Related Stories: