கூட்டாற்றில் அணைக்கட்டு அமைக்க வேண்டும்: ஆயக்குடி விவசாயிகள் கோரிக்கை

 

பழநி, அக். 16: பழநி அருகே ஆயக்குடியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் 1978ம் ஆண்டு வரதமாநதி அணை கட்டப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே இந்த அணைதான் சிறியது ஆகும்.

இந்த அணைக்கு கொடைக்கானல் வட்டத்தில் உள்ள வடகவுஞ்சி, மேல்பள்ளம் செம்பூரா குளம் ஆகிய மலைகிராம பகுதியில் அமைந்துள்ள ஓடைகளில் உருவாகி நீர் வருகிறது. இதன் உபரிநீர் வரட்டாறு வழியாக சண்முகநதிக்கு சென்று பெரியாவுடையார் கோயில் வழியாக ஓடி காவிரியில் இணைகிறது. ஆயக்குடி பேரூராட்சி மக்களுக்கு குடிநீருக்கும் இந்த அணையே ஆதாரமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு இந்த அணையின் நீர்ப்பாசனம் போதுமானதாக இருந்தது.

பெருகி வரும் மக்கள்தொகை மற்றும் பருவகால மாற்றங்களால் மழைப்பொழிவு குறைவு போன்ற காரணங்கள் நீர்த்தேவை போதுமானதாக இல்லை. எனவே, வரதமாநதி அணைக்கு மேல்புறம் கூட்டாற்றில் தடுப்பணை அமைத்து நீரை தேக்கி பற்றாக்குறையை சமாளிக்க வழிவகை செய்ய வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பழநி எம்எல்ஏ ஐ.பி செந்தில்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது, இதுதொடர்பாக சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வந்து திட்ட அறிக்கை தயாரித்து அரசு மூலம் தேவையான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கூட்டாற்றில் அணைக்கட்டு அமைக்க வேண்டும்: ஆயக்குடி விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: