கானாத்தூரில் சைக்கிளத்தான் போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கானாத்தூரில் நடைபெற்ற சைக்கிளத்தான் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி அருகே கானாத்தூர் ரெட்டிக்குப்பத்தில் ஹெச்.சி.எல்., நிறுவனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனம் இணைந்து நடத்திய மாபெரும் சைக்கிளத்தான் போட்டி நேற்று நடந்தது. போட்டிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.

போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டி 55 கிமீ, 23 கிமீ மற்றும் 15 கிமீ ஆகிய மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் 1100க்கும் (956 ஆண்கள் மற்றும் 169 பெண்கள்) மேற்பட்ட சைக்ளிங் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி, தொழில்முறை மற்றும் அமெச்சூர் ஆகிய இரு பிரிவுகளிலும் பங்கேற்பாளர்களை கொண்டதாக இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தொழில் வல்லுநர்களுக்கு ரூ.15 லட்சம் மற்றும் அமெச்சூர்களுக்கு ரூ.15 லட்சம் என ரூ.30 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.பாலாஜி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி, தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி, ஹெச்.சி.எல். நிறுவனத் தலைவர் சுந்தர் மகாலிங்கம், ஆசிய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு தலைவர் ஓன்கர் சிங், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற முதல் எச்.சி.எல் சைக்கிளத்தான் போட்டியில் 1000க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டி இரண்டாவது போட்டியாகும்.

*பாக். வீரருக்கு எதிராக கோஷம் அமைச்சர் உதயநிதி கண்டனம்
இந்தியா-பாகிஸ்தான் அணிக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து வெளியேறியபோது அவருக்கு எதிராக சில கிரிக்கெட் ரசிகர்கள் ‘ஜெய் ராம்… ஜெய் ராம்’ என கோஷமிட்டனர். இது தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: விருந்தோம்பலுக்கு புகழ் பெற்ற இந்தியாவில், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான அணுகுமுறையை ஏற்க முடியாது. நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக விளையாட்டு இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரதுவத்தை வளர்க்க வேண்டும். விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் பதிவில் கூறியுள்ளார்.

The post கானாத்தூரில் சைக்கிளத்தான் போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: