குறுவை விளைச்சல் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு ராமதாஸ் வலியுறுத்தல்

திண்டிவனம், அக்.15: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: குறுவை சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் விளைச்சல் 33% குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. காவிரி படுகையின் பிற மாவட்டங்களில் நெல் விளைச்சல் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாததால், 2 லட்சம் ஏக்கரில் குறுவைப் பயிர்கள் கருகியுள்ள நிலையில், கூடுதலாக மூன்றரை லட்சம் ஏக்கரில் விளைச்சலும் குறைந்திருப்பது காவிரிப் படுகை உழவர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

நெற்பயிர்கள் கதிர் பிடிக்கும் நேரத்தில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் தான் விளைச்சல் குறைந்துள்ளது. விளைச்சல் குறைந்ததால் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் இல்லாதால் கருகிய 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அத்துடன், தண்ணீர் இல்லாததால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கும், பாதிப்பின் அளவுக்கு ஏற்ற வகையில் அதிக அளவாக ரூ.25,000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குறுவை விளைச்சல் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: