ஆனாலும், இந்த கூட்டணியால் வெற்றிபெற முடியாமல் படுதோல்வியே சந்தித்து வந்தது. இந்த நிலையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியை உதாசீனப்படுத்தி வந்ததுடன், ஊழல்வாதிகள் என்றும் குற்றம் சாட்டினார். ஏற்கனவே, அதிமுக – பாஜ கூட்டணியை கட்சி தொண்டர்கள் விரும்பாததால், இதுதான் சாக்கு என கூறி அண்ணாமலையை கண்டித்து பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25ம் தேதி அதிரடியாக அறிவித்தார். அதிமுக வெளியேறினாலும், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தனது செயல்பாட்டில் உறுதியாக உள்ளார்.
அவருக்கு டெல்லி பாஜ மேலிட தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதியிலும் அதிமுக தனித்து போட்டியிடுவதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் சிறிய கட்சிகளை மட்டும் கூட்டணியில் வைத்துக்கொண்டு எம்பி தேர்தலை சந்திக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார். வழக்கமாக பொதுத்தேர்தலின்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிமுக தலைமை கழகத்தில் இருந்து தேர்தல் செலவுக்காக கோடிக்கணக்கில் பணம் கொடுப்பது வழக்கம்.
அப்போதெல்லாம் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் கட்சியை வழிநடத்தி வந்தனர். அதேபோன்று, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. இதனால், அதிமுக கட்சி சார்பில் போட்டியிட அதிமுகவினர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து போட்டி போட்டு விருப்ப மனு தாக்கல் செய்தனர். ஆனால், 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில்போது அதிமுக சார்பில் போட்டியிடும் எந்த வேட்பாளர்களுக்கும் கட்சி சார்பில் பணம் வழங்கப்பட மாட்டாது என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துவிட்டார். அதேநேரம், தனித்து போட்டியிடுவதிலும் உறுதியாக உள்ளார்.
இதையொட்டி, தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதியிலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தங்கள் தொகுதியில் 3 பேர் பட்டியலை கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கும்படி கூறி இருந்தாராம். ஆனால், எந்த மாவட்ட செயலாளர்களும் இதுவரை போட்டியிட விரும்பும் கட்சியினர் பற்றிய பட்டியலை தலைமைக்கும் இன்னும் அனுப்பி வைக்கவில்லை.
இதுபற்றி விசாரித்தபோது, ‘‘வழக்கமாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சி தலைமை ஒரு பெரிய தொகையை செலவுக்கு வழங்கும். இதுவரை நடந்த தேர்தலில் இதுதான் நடைமுறை. ஆனால், 2024ம் ஆண்டு எம்பி தேர்தலில் கட்சி சார்பில் பணம் வழங்கப்பட மாட்டாது என்றும், வேட்பாளர்கள் தான் முழு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக கட்சியில் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் யாரும் இல்லை. இப்படி இருக்கும்போது சொந்த பணத்தை செலவு செய்து தோல்வி அடைந்தால், மீண்டும் அந்த பணத்தை சம்பாதிக்க முடியாது.
மிகப்பெரிய கடன்காரனாகத்தான் இருக்க முடியும். அதனால் தான் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை’’ என்றனர். கட்சிகாரர்கள் போட்டியிடாமல் பின்வாங்குவதால், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களை கட்சியில் சேர்த்து அவர்களை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்களை அதிமுக கட்சிக்குள் இழுக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கு பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
The post 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார் எடப்பாடி: அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமில்லாத கட்சியினர்,பணம் செலவு செய்யும் தொழிலதிபர்களை நிறுத்த திட்டம் appeared first on Dinakaran.
