2012-16 காலக்கட்டத்தில் 354 மடங்கு அதிகரிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது வழக்குப்பதிவு: மனைவி, பெற்றோர், மாமனார், மாமியார் பெயர்களில் ரூ.3.89 கோடி சொத்துகள் குவிப்பு

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக உள்ள ராமேஸ்வர முருகன் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3.89 கோடி சொத்துகள் தனது மனைவி, பெற்றோர், மாமனார், மாமியார் பெயர்களில் வாங்கி குவித்துள்ளார். இதையடுத்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ராமேஸ்வர முருகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கோபிசெட்டிபாளையம் வெள்ளங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ராமேஸ்வர முருகன் (52). இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி (42) . இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

ராமேஸ்வர முருகன் கடந்த 1.4.2012 முதல் 10.5.2012 காலங்களில் தொடக்கப்பள்ளி இயக்குநராக பணியாற்றினார். பிறகு 11.5.2012 முதல் 31.7.2013 காலத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குநராக பணியாற்றினர். 13.7.2013 முதல் 10.12.2014 காலத்தில் மாநில கல்வி ஆராச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநராக பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக பணியில் உள்ளார். தொடக்கப்பள்ளி இயக்குநராக கடந்த 1.4.2012ம் ஆண்டு பணிக்கு வரும் போது, ராமேஸ்வரமுருகன் மற்றும் அவரது மனைவி, பெற்றோர், மாமனார், மாமியார் என குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மொத்தம் 1 கோடியே 98 லட்சத்து 10 ஆயிரத்து 105 ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருந்ததாக கணக்கு காட்டியுள்ளார்.

அதன்பிறகு கடந்த 31.3.2016ம் ஆண்டு ராமேஸ்வரமுருகன் மற்றும் அவரது மனைவி, உறவினர்கள் பெயரில் விவசாய நிலம் உள்பட 6 கோடியே 52 லட்சத்து 52 ஆயிரத்து 059 ரூபாய் அளவுக்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளார். கடந்த 1.4.2012 முதல் 31.3.2016ம் காலக்கட்டத்தில் ராமேஸ்வரமுருகன் மாத ஊதியம், வங்கி கணக்கு, விவசாயம் மூலம் வருமானம் என மொத்தம் 1 கோடியே 9 லட்சத்து 74,463 ரூபாய் வந்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதில், ராமேஸ்வரமுருகன் குடும்ப உறுப்பினர்கள் செலவுகள், கல்வி கட்டணம், மின்சார கட்டணம், இன்சூரன்ஸ் பாலிசி, வருமான வரி, நகைக்கடை என 44 லட்சத்து 54 ஆயிரத்து 135 ரூபாய் கணக்கு காட்டியுள்ளார்.

ஆனால், எந்தவித வருமானமும் இல்லாமல் தனது மனைவி, பெற்றோர், மாமனார், மாமியார் பெயர்களில் கடந்த 1.4.2012 முதல் 31.3.2016ம் ஆண்டுகளில் 4 கோடியே 54 லட்சத்து 41 ஆயிரத்து 954 ரூபாய் மதிப்பிலான விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரமுருகன் குற்றம்சாட்டப்பட்ட காலக்கட்டத்தில் அவரது வருமானத்தின்படி பார்த்தால் 65 லட்சத்து 20 ஆயிரத்து 328 ரூபாய் உயர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அவரது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 89 லட்சத்து 21 ஆயிரத்து 626 ரூபாய் அளுவுக்கு கடந்த 1.4.2012 முதல் 31.3.2016ம் ஆண்டு காலத்தில் அதாவது 354.66 விழுக்காடு அளவுக்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளார்.

எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வரமுருகன் அவரது மனைவி அகிலாண்ேடஸ்வரி, தந்தை சின்ன பழனிசாமி, தாய் மங்கையர்கரசி, மாமனார் அறிவுடைநம்பி, மாமியார் ஆனந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வரமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சம்மன் அனுப்பட்டுள்ளது. இச்சம்பவம் பள்ளிக்கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 2012-16 காலக்கட்டத்தில் 354 மடங்கு அதிகரிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது வழக்குப்பதிவு: மனைவி, பெற்றோர், மாமனார், மாமியார் பெயர்களில் ரூ.3.89 கோடி சொத்துகள் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: