வந்தவாசி, அக்.12: வந்தவாசி அருகே முன் விரோதம் காரணமாக கட்டிட தொழிலாளியை வீடு புகுந்து 5 பேர் கும்பல் கட்டையால் தாக்கி, சரமாரி கத்தியால் வெட்டியது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன்(27), கட்டிட தொழிலாளி. இவர் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிநேகா. தம்பதிக்கு 3 வயது மகன் உள்ளார். சிநேகாவிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா(50) என்பவரது மகன் மணி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த மாதம் தசரதன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜாவின் மனைவி கலைவாணியை தசரதன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தசரதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த தசரதன் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு தசரதன் வீட்டில் புகுந்த ராஜா, அவரது மனைவி கலைவாணி மற்றும் உறவினர்கள் 3 பேர் உட்பட 5 பேர் கும்பல் தசரதனை சரமாரியாக கட்டையால் தாக்கியும், கத்தியால் வெட்டியும் உள்ளனர்.
மேலும் பைக், மொபட் ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்களாம். இதில் காயமடைந்த தசரதன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தலைப்பகுதியில் 35 தையல்கள் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். இதுகுறித்து தசரதன் கொடுத்த புகாரின்பேரில் தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலு நேற்று வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள ராஜாவின் மனைவி கலைவாணி உட்பட 4 பேரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
The post வீடு புகுந்து ஜாமீனில் வந்தவரை சரமாரி வெட்டிய 5 பேர் கும்பல் ஒருவர் கைது; மனைவி உட்பட 4 பேருக்கு வலை வந்தவாசி அருகே முன் விரோத தகராறு appeared first on Dinakaran.