5,156 குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வீடு வீடாக சென்று அழைத்த கலெக்டர் பெற்றோரிடம் கைகூப்பி வணங்கி நெகிழ வைத்தார் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற

 

திருவண்ணாமலை, நவ.6: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற 5,156 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வீடு வீடாக சென்று அழைத்தார். அப்போது பெற்றோரிடம் கைகூப்பி வணங்கி அனுப்பும்படி கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டத்தில், பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. பின்னர், சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் பேசி, குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் புதூர் ஊராட்சியில் பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பணியில் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரடியாக களமிறங்கினார். அப்போது, வீடு வீடாக சென்று, பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு கலெக்டர் அழைத்து வந்தார். மேலும், பள்ளிக்கு அனுப்பாமல் குழந்தைகளை தடை செய்வது குற்றம் எனவும், தடை செய்யும் பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் தெரிவித்தார். அதோடு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என பெற்றோரிடம் கலெக்டர் கைகூப்பி வணங்கி கேட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பள்ளிக்கு அழைத்துவரப்பட்ட குழந்தைகளுக்கு கலெக்டர் உடனடியாக சீருடை, புத்தகம் போன்றவற்றை வழங்கினார்.

அதைத்ெதாடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், 1 முதல் பிளஸ் 2 வரை 5,156 மாணவர்கள் இடைநின்றது அடையாளம் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் 1,001 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி செல்லாத 4,155 மாணவர்களின் விபரங்கள் எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், களத்திற்கு நேரில் சென்று மேற்கொண்ட முயற்சியால் 2,423 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. விடுபட்டுள்ள 1,723 மாணவர்களையும் இம்மாத இறுதிக்குள் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதில், 954 மாணவர்கள் தனியார் பள்ளியில் படித்து இடைநின்றவர்கள். எனவே, தனியார் பள்ளிகளில் உள்ள வருகைப் பதிவுகளை ஆய்வு செய்து, மீண்டும் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம் புதூர் ஊராட்சியில் இடைநின்ற 51 மாணவர்களை சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் பேசி, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா என கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், பிடிஓக்கள் பிரித்திவிராஜ், பரமேஸ்வரன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post 5,156 குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வீடு வீடாக சென்று அழைத்த கலெக்டர் பெற்றோரிடம் கைகூப்பி வணங்கி நெகிழ வைத்தார் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற appeared first on Dinakaran.

Related Stories: