பாரில் மது அருந்த சென்ற புதுவை தலைமை செயலக ஊழியரை கடத்தி தங்கம், வெள்ளி நகைகள் பறிப்பு கஞ்சா கும்பல் அதிரடி கைது

புதுச்சேரி, அக். 11: புதுச்சேரி பாரில் மதுஅருந்த சென்ற தலைமை செயலக ஊழியரை கடத்தி தங்கம் வெள்ளி நகைகளை பறித்த கஞ்சா கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி, மணக்குள செட்டியார் நகர், 6வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன் (48). தலைமை செயலக அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர் பட்டப்பகலில் லாஸ்பேட்டை இசிஆரில் உள்ள ஒரு பாரில் மதுஅருந்தி உள்ளார். அப்போது அவரது மேஜையில் 3 பேர் ராமநாதனிடம் பேச்சு கொடுத்து வேறுபாரில் நல்ல சரக்கு கிடைக்கும் என கூறவே, ராமநாதன் அவர்களுடன் சென்றுள்ளார்.

பின்னர் மேட்டுப்பாளையம் சென்று மதுஅருந்தியுள்ளனர். அங்கு அதிக போதையில் இருந்த ராமநாதனை அக்கும்பல் கனரக ஊர்தி முனையம் ரோடு வழியாக நாவற்குளம் பகுதிக்கு கடத்தி சென்று தாக்கி 2 பவுன் தங்க செயின், வெள்ளி பிரேஸ்லட், வெள்ளி அரைசான் கயிறு, வாட்ச் ஆகியவற்றை மிரட்டி பறித்தது. போதையில் இருந்த ராமநாதன், மறுநாள் தெளிந்த நிலையில் தனக்கு நடந்த சம்பவம் தொடர்பாக லாஸ்பேட்டை, காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கில்டா சத்யநாராயணன், எஸ்ஐ அனுஷா பாஷா தலைமையிலான போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழிப்பறி கும்பல் 3 பேர் மீது வழக்குபதிந்து அவர்கள் மதுஅருந்திய பாரில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர்.

அப்போது நகைகளை பறித்த கும்பல் அடையாளம் தெரிந்தது. அதன்பேரில் லாஸ்பேட்டை, கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ஜான் என்ற ஜான்சன் (26), பாஸ்கர் (19), முருகன் (35) ஆகியோரை நேற்று காலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அரசு ஊழியர் ராமநாதனை கடத்தி நகை பறித்ததை ஒப்புக் கொண்டனர். தங்க செயின் பறிமுதல் செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்களில் ஜான்சன் மீது ஏற்கனவே புதுச்சேரியில் கஞ்சா, அடிதடி வழக்கும், ஆரோவில்லில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பாரில் மது அருந்த சென்ற புதுவை தலைமை செயலக ஊழியரை கடத்தி தங்கம், வெள்ளி நகைகள் பறிப்பு கஞ்சா கும்பல் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: