மனம் விரும்புவதைச் செய்யுங்கள்

கிறிஸ்துவம் காட்டும் பாதை

கல்லூரியில் பேராசிரியர் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த கரும்பலகையில் பெரிய பூஜ்யம் ஒன்றை வரைந்தார். இதற்கு ஏதாகிலும் மதிப்பு உண்டா? என்று மாணவர்களிடம் கேட்டார். மாணவர்கள் இல்லை என்றார்கள். பின்பு, அதன் அருகில் இன்னொரு பூஜ்யம் வரைந்தார். அதற்கு அருகில் இன்னொரு பூஜ்யம் வரைந்தார். இவைகளுக்கு ஏதேனும் மதிப்பு உண்டா? என்று கேட்டார். பின்பு 1 என்ற எண்ணின் அருகே ஒரு பூஜ்யத்தை வரைந்தார். அது 10 என்ற மதிப்பைப் பெற்றது. இரண்டு பூஜ்யங்களுக்கு முன்பாக 1 என்ற எண்ணைப் போட்டபோது அதன் மதிப்பு 100 ஆக உயர்ந்தது. 3 பூஜ்யங்களுக்கு முன்பாக 1 என்ற எண்ணைப் போட்டபோது அது 1000 என்று ஆனது.

பேராசிரியர் சொன்னார். உங்களுடைய முயற்சிகளெல்லாம் வெறும் பூஜ்யங்கள்தான். ஆனால் அதற்கு முன்பாக ஒன்று என்று இறைவனாகிய இயேசு கிறிஸ்துவை வைப்பீர்களென்றால் பூஜ்யங்கள் மதிப்பைப் பெறுவதுபோல எப்பொழுதும் உங்களுடைய முயற்சிகளெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். ஒன்றுமில்லாத பூஜ்யத்தையும் அதிக மதிப்பாக்கி ஒன்றானவர்தான் இறை இயேசு.

‘‘உன் பணத்தை பிரித்து ஏழெட்டு இடங்களில் முதலாக வை. ஏனெனில் எங்கு எவ்வகையான இடர் நேருமென்பதை நீ அறிய இயலாது. வானத்தில் கார் முகில்கள் திரண்டு வருமாயின் ஞாலத்தில் மழை பெய்யும். மரம் வடக்கு நோக்கி விழுந்தாலும், தெற்கு நோக்கி விழுந்தாலும் விழுந்த இடத்திலேதான் கிடக்கும். காற்று தக்கவாறு இல்லையென்று காத்துக் கொண்டே இருப்போர் விதை விதைப்பதில்லை. வானிலை தக்கபடி இல்லையென்று சொல்லிக்கொண்டே இருப்போர் அறுவடை செய்வதில்லை.

காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது. அவ்வாறே அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறியமுடியாது. காலையில் விதையைத் தெளி. மாலையிலும் அப்படியே செய். அதுவோ இதுவோ எது பலன் தரும் என்று உன்னால் கூற முடியாது. ஒருவேளை இரண்டுமே நல்ல விளைச்சலைத் தரலாம்.

ஒளி மகிழ்ச்சியூட்டும்; கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும். மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்நாள் எல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். இருள் சூழ்ந்த நாள்கள் பல இருக்கும் என்பதையும் அவன் மற்றலாகாது. அதற்குப்பின் வருவதெல்லாம் வீணே. இளையோரே!

இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள். கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.

மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக்கொள்ளுங்கள். குழந்தைப் பருவமும், இளமையும் மறையக்கூடியவையே.’’ – (சபை உரையாளர் 11:1-10)
உண்மை, எளிமை, அறிவு, தியாகம், சமர்ப்பணம், மகத்தான நிலையான சட்டங்கள் ஆகியவை உலகைக் காத்து வருகின்றன. இவை ஆறும் தர்மம் என்னும் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள்.

– ‘‘மணவைப்பிரியன்’’
ஜெயதாஸ் பெர்னாண்டோ

The post மனம் விரும்புவதைச் செய்யுங்கள் appeared first on Dinakaran.

Related Stories: