சென்னையில் இருந்து சூடான் நாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக ரூ.55 லட்சம் பெற்று மோசடி: தனியார் நிறுவன உரிமையாளர் கைது

சென்னை: சென்னையில் இருந்து சூடான் நாட்டிற்கு 502 மெட்ரிக் டன் அரிசி ஏற்றுமதி செய்வதாக முன்பணம் ரூ.55 லட்சம் பெற்று மோசடி செய்ததாக, தனியார் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சூடான் நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம் நடத்தும் ஷாகுல் அமீது என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சூடானில் வசித்து வருகிறேன். நான் நடத்தும் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலம், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து அரிசி மற்றும் பருப்பு வகைகளை கொள்முதல் செய்து, சூடான் மற்றும் துபாயில் வியாபாரம் செய்து வருகிறேன்.

அதன்படி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ‘ஆயிஷா எக்ஸ்போர்ட்’ என்ற ஏற்றுமதி நிறுவனத்தின் மூலம் 502 மெட்ரிக் டன் அரிசியை ரூ.2 கோடிக்கு கொள்முதல் செய்ய இ-மெயில் மூலம் ஆயிஷா எக்ஸ்போர்ட் உரிமையாளர் முகமது ஜாகீர் உசேனிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு, 3 முறையாக ரூ.54,99,300 லட்சத்தை முன்பணமாக வங்கி மூலம் பரிவார்த்தனை செய்தேன். பணம் அனுப்பி பல மாதங்கள் கடந்த நிலையில் சொன்னப்படி 502 மெட்ரிக் டன் அரிசி ஏற்றுமதி செய்து தரவில்லை. இதுகுறித்து கேட்ட போது, முகமது ஜாகீர் உசேன் (33), பணத்தை திருப்பி தர முடியாது என்று அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார்.

எனவே அவரிடம் இருந்து அரிசி ஏற்றுமதி செய்ய கொடுத்த ரூ.54.99 லட்சத்தை மீட்டு தர வேண்டும், என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் முகமது ஜாகீர் உசேன் 502 அரிசி ஏற்றுமதி செய்து தருவதாக ஷாகுல் அமீது என்பவரிடம் ரூ.54.99 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்து வந்த துரைப்பாக்கத்தை சேர்ந்த முகமது ஜாகீர் உசேனை கைது செய்தனர். அவரிடம் இருந்து சொகுசு கார், லேப்டாப், 11 செல்போன்கள் மற்றும் ஒப்பந்தம் போட பயன்படுத்திய போலி சீல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முகமது ஜாகீர் உசேனிடம் நடத்திய விசாரணையில், முகமது ஜாகீர் உசேன் இதுபோல் வெளிநாடுகளில் உள்ள இறக்குமதி நிறுவனங்களுடன் போலியாக ஒப்பந்தம் போட்டு பல கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து முகமது ஜாகீர் உசேன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, இந்த மோசடிக்கு உடந்தையாக உள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் இருந்து சூடான் நாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக ரூ.55 லட்சம் பெற்று மோசடி: தனியார் நிறுவன உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: