ஹார்வர்டு பல்கலை. பேராசிரியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொருளாதார வரலாற்று பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு இந்தாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனை சேர்ந்த ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.

இந்தாண்டு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 2ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொருளாதார வரலாற்று பேராசிரியர் மற்றும் தொழிலாளர் பொருளாதார நிபுணரான கிளாடியா கோல்டினுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலின வருவாய் வேறுபாடுகளுக்கான காரணங்களை கண்டறிந்ததற்காகவும், தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பு பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காகவும் இந்தாண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.
கிளாடியா கோல்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஹார்வர்டு பல்கலை. பேராசிரியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு appeared first on Dinakaran.

Related Stories: