பீக் ஹவர், நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை: சிறு, குறு தொழிற் கூடங்களில் கறுப்புக்கொடி போராட்டம்

கோவை: தொழிற்கூடங்களுக்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்கட்டண உயர்வால் தொழில்துறை கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக கூறி 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொழில்துறை நுகர்வோர் கூட்டமைப்பினர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக சிறு, குறு தொழில்கூடங்களுக்கான பீக் ஹவர் கட்டணம் மற்றும் நிலை கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்யப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிறு, குறு தொழில்கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தில் கூட்டமைப்பினர் ஈடுபட்டனர். கோவையில் தமிழ்நாடு தொழில்துறை மின் பயனீட்டாளர் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. தொழில்கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றிய பின்னர் பேரணியாக சென்ற தொழில் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மின்கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மனு அளித்தனர்.

ஈரோட்டில் தொழில்துறை அமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த கூட்டமைப்பு பிரதிநிதிகள் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மனு கொடுத்தனர். 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்த கட்டமாக வரும் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.

The post பீக் ஹவர், நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை: சிறு, குறு தொழிற் கூடங்களில் கறுப்புக்கொடி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: