ஆக்கிரமிப்பை கண்டித்து விருந்தினர் மாளிகையில் குடியேறும் போராட்டம்: திருப்போரூரில் பரபரப்பு

திருப்போரூர்: திருப்போரூரில் இன்று காலை பொதுப்பணி துறை விருந்தினர் மாளிகை இடத்தை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. இதை கண்டித்து அதிமுக உள்பட பல்வேறு கட்சியினர் விருந்தினர் மாளிகைக்குள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது. திருப்போரூர் ரவுன்டானா அருகே பொதுப்பணி துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை வளாகத்தில் வீராணம் திட்ட அலுவலகம், பொதுப்பணி துறை அலுவலகம் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான விருந்தினர் மாளிகையை ஒட்டி பிரமாண்ட மதில்சுவர் கட்டப்பட்டிருந்தது. தற்போது ஓஎம்ஆர் சாலை விரிவாக்கப் பணிக்காக, விருந்தினர் மாளிகையின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த இடத்தின் ஒரு பகுதியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டத் துவங்கினர். இதற்கு கடந்த வாரம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அப்பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், இன்று அதிகாலை மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டும் பணி துவங்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் காலை 8 மணியளவில் அதிமுக, மதிமுக, மா.கம்யூ, விசிக, பாமகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, அங்கு பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருப்போரூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டும் பணியை நிறுத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர். இதையடுத்து வட்டாட்சியர் பூங்கொடியிடம் போலீசார் போனில் பேசி, அங்கு கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி பொதுப்பணி துறை இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் அனைத்து கட்சியினரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனல் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

The post ஆக்கிரமிப்பை கண்டித்து விருந்தினர் மாளிகையில் குடியேறும் போராட்டம்: திருப்போரூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: