தர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி விற்பனை

தர்மபுரி, அக்.8: புரட்டாசி 3வது சனிக்கிழமை மற்றும் மகாளய பட்ச விரத காலத்தையொட்டி, தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 47.72 டன் காய்கறி, பழங்கள் விற்பனையானது. தர்மபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவம் தவிர்த்து, சைவ உணவுக்கு மாறுவார்கள். பெருமாளுக்கு விரதம் இருந்து சனிக்கிழமைகளில் படையலிட்டு வழிபடுவார்கள். புரட்டாசி மாதம் பிறந்து 20 நாட்களாகிறது. நேற்று 3வது சனிக்கிழமை என்பதால் ஏராளமானோர் விரதம் இருந்து பெருமாளுக்கு படையல் போட்டு விளக்கேற்றி வழிபட்டனர். முன்னதாக நேற்று காலையிலேயே உழவர் சந்தைகள், தினசரி சந்தை மற்றும் காய்கறி கடைகளில் குவிந்தனர்.

தர்மபுரி உழவர் சந்தையில் 144 விவசாயிகள் 59 வகையான காய்கறி, பழங்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று 47,727 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ₹15 லட்சத்து 54 ஆயிரத்து 976 ஆகும். 9,545 பேர் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். காலை 6 மணிக்கு துவங்கிய சந்தையில் குவிந்த மக்கள் 4 மணி நேரத்தில் 47 டன் காய்கறிகள் வாங்கிச்சென்றனர். விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ₹12, கத்தரி ₹34, வெண்டை ₹24, அவரை ₹40, கொத்தவரை ₹24, பாகல் ₹24, புடல் ₹26, பீக்கங்காய் ₹40, பச்சை மிளகாய் ₹26, சின்னவெங்காயம் ₹65, பெரிய வெங்காயம் ₹37, கேரட் ₹54, பீட்ரூட் ₹30, பீன்ஸ் ₹110, முட்டை கோஸ் ₹22, உருளைக்கிழங்கு ₹30க்கும் விற்பனையானது.

வழக்கத்தைவிட நுகர்வோர் வரத்து அதிகமாக இருந்ததால், தர்மபுரி -கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உழவர் சந்தைக்கு வந்த நுகர்வோர்கள் சாலையோரத்தில் தங்களின் டூவீலர்களை நிறுத்திச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல், ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் 18.28 டன் காய்கறி, பழங்கள் ₹6.06 லட்சத்துக்கு விற்பனையானது. பென்னாகரம், பாலக்கோடு, அரூர் ஆகிய இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் சராசரியாக 10 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படும். புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று தலா 15 டன் வரை காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டன.

The post தர்மபுரி உழவர் சந்தையில் 47 டன் காய்கறி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: