ஆண்கள் டி20 பைனலில் இந்தியா – ஆப்கான் இன்று மோதல்

 

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. முதல் அரையிறுதியில் வங்கதேசத்துடன் நேற்று மோதிய இந்தியா, டாஸ் வென்று பந்துவீசியது. இந்திய ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜாகர் அலி 24* ரன், பர்வேஸ் உசைன் 23, ரகிபுல் ஹசன் 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இந்திய பந்துவீச்சில் சாய் கிஷோர் 3, வாஷிங்டன் 2, திலக் வர்மா, ரவி பிஷ்னோய், ஷாபாஸ் அகமது, அர்ஷ்தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 97 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்டானாலும், கேப்டன் ருதுராஜ் – திலக் வர்மா இணைந்து வங்கதேச பந்துவீச்சை சிதறடிக்க, இந்தியா 9.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ருதுராஜ் 40 ரன் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 55 ரன்னுடன் (26 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

2வது அரையிறுதியில் ஆப்கானிஸ்தானுடன் மோதிய பாகிஸ்தான் 18 ஓவரில் 115 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 17.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்து வென்று பைனலுக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் பைனலில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் தங்கப் பதக்கத்துக்காக மோதுகின்றன. அதற்கு முன்பாக வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

The post ஆண்கள் டி20 பைனலில் இந்தியா – ஆப்கான் இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: