காவிரி மேலாண்மை ஆணையத்திடம் மேகதாது அணை கட்ட முன்மொழிவு தாக்கல்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல்

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராக காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான முன்மொழிவுகளையும் மேலாண்மை ஆணையத்திடம் சமர்ப்பித்திருப்பதாகவும், மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வரும் மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், ‘காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3000 கனஅடி நீரையே திறந்துவிட முடியாத இக்கட்டான சூழலில் கர்நாடகா உள்ளது. எனவே அதை விளக்கி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறோம். மேகதாது அணை கட்டுவது குறித்த முன்மொழிவையும் கொடுத்திருக்கிறோம். மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

போதிய மழை இல்லாத காலங்களில் நீர் பகிர்விற்கான பார்முலாவை வகுக்க வேண்டும். இந்த ஆண்டு முடியப்போகிறது. எனவே அடுத்த ஆண்டு அதற்கான பார்முலாவை வகுத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக கர்நாடக மாநில எம்.பிக்களிடம் பேசப்படும்’ என்றார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், ஒவ்வொரு அடியாக வைக்க வேண்டும். அனைத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கு செல்லக்கூடாது என்று தெரிவித்தார்.

The post காவிரி மேலாண்மை ஆணையத்திடம் மேகதாது அணை கட்ட முன்மொழிவு தாக்கல்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: