நாமக்கல், அக்.5: நாமக்கல் மாவட்ட காசநோய் மையத்தில், காலியாக உள்ள லேப் டெக்னீஷியன் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட நலச்சங்கம்-காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் லேப் டெக்னீசியன் பணியிடம் காலியாக உள்ளது. 11 மாத ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு பிளஸ் 2 சான்றிதழுடன், டிஎம்எல்டி, சிஎம்எல்டி டிப்ளமோ படிப்பு மற்றும் இதனுடன் 2 மாத கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழும் முடித்திருக்க வேண்டும். இந்த பணியிடத்திற்கு மாதம் ₹13 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பங்களை, கல்வித் தகுதி, சான்றிதழ் நகலுடன் தங்கள் புகைப்படத்தினையும் இணைத்து, துணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகம், மோகனூர் ரோடு, நாமக்கல் என்ற முகவரிக்கு வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
The post லேப் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.