களைகட்டும் கச்சோரி!..

பல வட இந்திய உணவுகள், ஒட்டுமொத்த இந்திய உணவு வரிசையில் இடம் பிடித்திருக்கின்றன. இதில் சில உணவுகள் தமிழகத்தில் எடுபடாது. ஆனால் சில உணவுகள் நம்மூர்க்காரர்களையும் கவர்ந்து விடும். அவற்றில் ஒன்றுதான் கச்சோரி. வடஇந்தியாவின் பிரபலமான இந்த உணவு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெகு எளிதாக கிடைக்கிறது. இதற்கென்றே சில உணவு ரசிகர்களும் உருவாகி இருக்கிறார்கள். இத்தகைய கச்சோரி குறித்து சில ருசியான தகவல்கள்!வட இந்திய உணவு என கச்சோரியை பொத்தாம் பொதுவாக சொன்னாலும், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் பிறந்ததுதான் கச்சோரி என வரலாறு இருக்கிறது. உணவு விசயத்தில் இந்த இரண்டு மாநிலங்களும் சில பாரம்பரியங்களைக் கொண்டிருக்கின்றன. அதிலும் ராஜஸ்தானுக்கென்று பல உணவுப்பாரம்பரியம் இருக்கிறது. இன்று இந்தியா முழுக்க ராஜஸ்தான்காரர்கள் குடியேறி இருக்கிறார்கள். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட மார்வாரி சமூகத்தினர்தான் இந்தியா முழுக்க கச்சோரியை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

நமக்கு கச்சேரி என்றால் அர்த்தம் தெரியும்? இது என்ன கச்சோரி என்கிறீர்களா? கச்சோரி என்ற வார்த்தை இந்தி வார்த்தையான ‘கச்சௌரி’ அல்லது ‘கச்சோடி’ என்பதிலிருந்துதான் பிறந்திருக்கிறதாம். இதனால்தான் இதற்கு கச்சோரி என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் ‘கச்’ என்பது கரடுமுரடான மாவுடன் செய்யப்பட்டது என்பதைக் குறிக்கிறது. உருண்டை அல்லது தட்டையான வடிவத்தில், பருப்பு, உருளைக்கிழங்கு, பட்டாணி, வெங்காயம், மசாலா மற்றும் மூலிகைகள் போன்ற பொருட்களை நிரப்பி எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுகிறது இந்த கச்சோரி. அதேசமயம், மாநிலங்களுக்கு ஏற்றவாறு, இதில் நிரப்பப்படும் பொருட்களும் மாறுபடுகிறது. இதனால் சுவையும் ஊருக்கு ஊர் மாறுகிறது. இதனால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சுவையிலும் கச்சோரி கிடைக்கிறது.

ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு தனித்தன்மையுடன் விளங்குகிறது கச்சோரி. உத்தரபிரதேசத்தில் ராஜ் கச்சோரி, கஸ்தா கச்சோரி ரொம்ப பேமஸ். அதே சமயம் ராஜஸ்தானில் பியாஸ் கச்சோரி (வெங்காயம் நிரப்பப்பட்ட) பேமஸ். கச்சோரியின் உள்ளே நிரப்பப்படும் மசாலாக்களும் மாநிலங்களுக்கு ஏற்றவாறு சில இடங்களில் மாறுபடுகிறது. அதாவது, உருளைக்கிழங்கு, பட்டாணி, பனீர் அல்லது சில இடங்களில் இறைச்சி சேர்த்து கூட செய்யப்படுகிறது. குறிப்பிட்ட பகுதிகளில், கச்சோரி சுவையை அதிகரிக்க ஒரு சுவையான கறி அல்லது தயிர் சேர்க்கப்படுகிறது. நம்ம ஊரில் பச்சை நிறத்துடன் காணப்படும் புளிப்பு சட்னிதான் பேமஸ். இந்தியா முழுக்க பிரபலமான தெருவோர சிற்றுண்டியாக மாறி வரும் கச்சோரி, வடமாநிலங்களில் திருவிழாக்களிலும் வழங்கப்படும் ஸ்பெஷல் உணவாக விளங்குகிறது. உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகங்கள் இந்த சுவையான கச்சோரியை ரசித்து ருசித்து வருவதால், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று கோலோச்சுகிறது.

தேவி

 

The post களைகட்டும் கச்சோரி!.. appeared first on Dinakaran.

Related Stories: