தமிழரின் உணவுக் கோட்பாடு
நம் மக்கள் உணவுப் பொருள்களை சூடு மிக்க உணவுகள், குளிர்ச்சி தரும் உணவுகள், பித்தம் மிகுந்த உணவுகள், வாயுவை உண்டாக்கும் உணவுகள் என வகைப்படுத்தி எந்த பருவத்தில் எவ்வகை உணவை உண்ண வேண்டும் என்பதை தெளிவாக பின்பற்றி வந்தனர்.
சூடுமிக்க உணவுகள்
வரகு, கத்தரிக்காய், வேளைக்கீரை, மாம்பழம், பப்பாளி, கருவாடு, கோழி இறைச்சி, முட்டை, வெல்லம் போன்றவற்றை சூடு மிகுந்த உணவுப்பொருள்களாக மக்கள் கருதுகின்றனர். இவற்றுள் மாம்பழம் தவிர மற்ற உணவுகளைக் குளிர்காலத்தில் உண்பது மக்களிடம் வழக்கமாக உள்ளது.
குளிர்ச்சி தரும் உணவுகள்
கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், கீரை வகைகள், (புளிச்சக்கீரை தவிர) இளநீர், திராட்சை, வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், வெங்காயம், நீராகாரம், பழைய சோறு, நாவல் பழம், சுரைக்காய், ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவற்றை குளிர்ச்சியான உணவுப் பொருள்களாக கருதி இவற்றை கோடை காலத்தில் உண்பது கிராமப்புற மக்களிடம் இன்றும் வழக்கில் உள்ளது.
பித்தம் மிகுந்த உணவுகள்
பனங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கொத்தவரங்காய், தேநீர் ஆகியவை பித்தம் நிறைந்ததாக மக்களால் கருதப்படுகிறது.
வாயுவைஉண்டாக்கும் உணவுகள்
உருளைக்கிழங்கு, வாழைக்காய், அவரை, மொச்சை, தட்டைப்பயிறு, நண்டு, முட்டை ஆகிய உணவுப் பொருள்கள் வாயு நிறைந்தவையாக கருதப்படுகின்றன. வாயு அதிகரித்தலே வாதம் எனப்படுகிறது. எனவே வாயு நிறைந்த உணவுகளை வயதானவர்கள் தவிர்க்கின்றனர்.
கோடைக்கால உணவுகள்
கோடை காலத்தில் வெப்பம் மிகுதியாக இருப்பதனால் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளையும், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும், இளநீர், நுங்கு போன்ற இயற்கை பொருள்களையும், மோர், நீராகாரம் போன்ற பானங்களையும் பயன்படுத்துவது நம் மரபான ஒரு உணவுப் பழக்கமாகும். தானியங்களில் இருந்து கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற கூழ் வகைகளையும் கோடை காலத்தில் மக்கள் குடிக்கும் வழக்கம் இன்று
நகர்ப்புறத்திலும் பரவி வருகிறது.
மழைக்கால உணவுகள்
கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை உண்ணும் மக்கள் மழைக்காலத்தில் சூடான உணவு பொருள்களை உண்பர். சூடு என்பது அகச்சூடு, புறச்சூடு இரண்டையுமே குறிக்கிறது. அகச்சூடு என்பது உணவின் தன்மையில் அமைந்தது. புறச்சூடு என்பது சமைத்த முறையில் அமைவது (சுடுசோறு).மக்களின் பொருளாதார வசதிக்கேற்ப மழைக்காலங்களில் சூடாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. இட்லி, தோசை போன்ற சிற்றுண்டி வகைகளை நடுத்தட்டு மக்களும், சூடான கஞ்சி வகைகளை வறுமை கோட்டுக்கு கீழே வாழும் மக்களும் மழைக்காலத்தில் உண்பது மரபாக உள்ளது.அதற்கு இணை உணவாக கோடையில் தங்களால் பாதுகாத்து வைக்கப்பட்ட வற்றல் வகைகளையும், ஊறுகாய் களையும் பயன்படுத்தும் மரபு கிராமப்புறங்களில் உள்ளது.
பனிக்கால உணவுகள்
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப கிராமங்களில் ஆடி மாதத்தில் தோட்டத்தில் விதைகளை குறிப்பாக காய்கறி விதைகளை ஊன்றி குழி அமைக்கும் வழக்கம் உள்ளது. இந்தக் காய்கள் காய்க்கத் தொடங்கும்போது பனிக்காலம் தொடங்கிவிடும். அந்த பனிக்காலத்திற்கு ஏற்ற காய்களான அவரைக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பரங்கிக்காய், புடலங்காய், பாகற்காய் போன்ற காய்களை தங்கள் தோட்டத்திலிருந்து உற்பத்தி செய்து அவற்றை பனிக்கால உணவாக சமைத்து உண்ணும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது. இவ்வாறு மக்கள் தொன்றுதொட்டு பருவ காலங்களுக்கு ஏற்ப உணவு வகைகளை உண்ணும் வழக்கம் நம் தமிழகத்தின் தொன்மையான வழக்கமாக கருதப்படுகிறது. உணவுப் பொருள்களை சூடு, குளிர்ச்சி, பித்தம், வாயு என வகைப்படுத்தி உடல்நிலை மற்றும் பருவ நிலைக்கேற்ப உண்ணுகின்றனர். சூடு, குளிர்ச்சி கோட்பாட்டை ஆங்கில மருத்துவம் அவ்வளவாக ஏற்பதில்லை. ஆனால் நம் மரபுவழி மருத்துவ முறையான சித்த மருத்துவம் இக்கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்ததே ஆகும். எனவே நமது மரபு வழி உணவும், மரபு வழி மருத்துவ முறையும் ஒத்துப் போவதாகவே அமைந்துள்ளது. இன்றைய இளைய சமுதாயம் குறிப்பாக மாணவர் சமுதாயம் தங்கள் முன்னோர்கள் எந்தக் காலத்தில் எந்த வகையான உணவை உண்டு உடல் நலத்தை காப்பாற்றி வந்தனர் என்பதை அறிந்துகொண்டு அதனை பின்பற்றுவது மிகுந்த நன்மை பயக்கும். மனிதர்களை வளமாக கருதும் நம் நாட்டில் மனித வள மேம்பாட்டிற்கு இன்றியமையாதது உணவுப் பழக்கமாகும். நமது மரபைப் பின்பற்றி, உணவே மருந்து! மருந்தே உணவு! என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உடல் நலத்தைக் காப்போம்.
– இரத்தின புகழேந்தி
The post பருவ காலங்களுக்கு ஏற்ற உணவு முறை! appeared first on Dinakaran.
