தமிழ்நாட்டில் பா.ஜ மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து விட்டது என்ற மனநிலையில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டுவந்ததன் விளைவு இந்த வெளியேற்றம். நாடாளுமன்ற தேர்தலை அருகில் வைத்துக்கொண்டு, அதுவும் பா.ஜவுக்கு முக்கியமான தேர்தல் நேரத்தில் இப்படி கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படுவது நிச்சயம் கையறு நிலை தான். ஆனால் பா.ஜவை வெளியேற்றிய பிறகு எடப்பாடி தலைமையிலான அதிமுக மிகவும் உற்சாகமாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு அல்ல இது.
ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு தான் பா.ஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக எடுத்த தீர்மானம். பா.ஜ கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது என்று தெள்ளத்தெளிவாக சொல்லி விட்டார் எடப்பாடி. இப்போது பா.ஜ தருணம். அண்ணாமலையை நீக்குவதா, இல்லை அதிமுக நிலையை ஏற்றுக்கொண்டு, ஒன்றியத்தில் உள்ள ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சிறிய கட்சிகளை இணைத்து பா.ஜ தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதா என்றெல்லாம் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம் என்கிறார் பா.ஜ மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி. தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இரண்டு கட்சிகளும் இணையாதா, இனி அவ்வளவு தானா என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தை பயன்படுத்தி பா.ஜவுடன் நெருங்கி அரசியல் ஆதாயம் பெற முடியுமா என்று சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணியினரும் காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பரபரப்பான நிலையில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள் பங்கேற்ற 2 நாள் போலீஸ் மாநாடு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி உள்ளது.
இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழலில் சமூக ஊடகங்கள் பற்றிய எச்சரிக்கையை முதல்வர் தெரிவித்துள்ளார். உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம் உள்ளதால், கலெக்டர்கள், எஸ்பிக்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களை கண்காணித்து பொய் செய்தி பரப்புவோர், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் அதுபற்றி சமூக ஊடகங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வந்துவிட்ட வேளையில், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் அடியோடு மாறிவிட்ட நிலையில், ஒவ்வொரு மாவட்டத்தையும் நிர்வகித்து வரும் கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு நிச்சயம் இந்த அறிவுரை கைகொடுக்கும்.
The post முதல்வர் எச்சரிக்கை appeared first on Dinakaran.
