ராமதாஸ் (பாமக நிறுவனர்): சாத்தியமே இல்லாதது என்பது போன்ற மாயை ஏற்படுத்தப்பட்டு வந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது பீகார் மாநில அரசு. இதன் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ஆக்கப்பூர்வமான வகையில் வழிகாட்டியிருக்கிறார் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்.
அன்புமணி (பாமக தலைவர்): இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது பீகார் மாநில அரசு. இதன்மூலம் சமூகநீதியைக் காப்பதில் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமையை பீகார் அரசு வென்றெடுத்திருக்கிறது. 13 கோடி மக்கள்தொகை கொண்ட பீகாரில் ரூ.500 கோடிக்கும் குறைவான செலவில் 45 நாட்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிகிறது என்றால், 7.64 கோடி மட்டுமே மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் இன்னும் குறைவான செலவில், குறைவான நாட்களில் இன்னும் சிறப்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என்பது உறுதி. எனவே, இனியும் தயங்காமல் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும்.
நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ மாநில தலைவர்): பீகார் மாநில அரசு பல்வேறு எதிர்ப்புகள், முட்டுக்கட்டைகளை தகர்த்தெரிந்து, நாட்டிலேயே முதன்முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆகவே, சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை உணர்ந்து, சமூகநீதியின் அடையாளமாக விளங்கும் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு விரைவில் நடத்த வேண்டும்.
டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும் என்பது பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்துவதற்காகவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்காகவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது.
பொன்குமார் (விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சித் தலைவர்): தமிழ்நாட்டைப் போன்று பிற மாநிலங்களிலும் அனைத்து மக்களுக்குமான சமூகநீதி வழங்கக்கூடிய இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்திடவும் அதேபோன்று ஒன்றிய அளவிலும், ஒன்றிய அரசின் இடஒதுக்கீடு அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக்காக நடைமுறைப்படுத்திடவும் சாதிவாரி கணக்கெடுப்பு மிக முக்கியமான ஒன்றாகும். எனவே ஒன்றிய மோடி அரசு ஏற்கனவே எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டு அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டு நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும். அல்லது புதிதாக விரைந்து சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.
சேம.நாராயணன் (தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு தலைவர்): பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சாதி மக்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசே இடஒதுக்கீட்டை எடுத்து சமூகநீதி அடிப்படையில் வழங்க வழிவகுத்து, இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார். அவரின் இச்செயலை மனதார பாராட்டி வரவேற்கிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
எம்.வி.சேகர் (கோகுல மக்கள் கட்சி தலைவர்): பீகார் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்தி வெற்றி கண்டு இருக்கிறது. இதேபோல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சாதிவாரியான ஆய்வுக்கு உடனே உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோன்று, மத்திய அரசும் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் ஒவ்வொருவரும் உண்மையாக சமூகநீதி பெற முடியும்.
The post சமூகநீதியை நிலைநாட்ட அடித்தளமாக அமையும் ஒன்றிய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
