பாஜவுடன் பேச்சே கிடையாது: சொல்கிறார் கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: பாஜவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது, அக்கட்சியினருடன் பேச்சு எதுவும் நடக்கவில்லை என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கூறினார். ‘தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூட்டணி தொடர்பாக பாஜ தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச டெல்லி சென்றுள்ளார். அதிமுக -பாஜ இடையே கூட்டணி நீடிக்கும். அதற்காக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. கூட்டணி தொடர வேண்டும் என்பதால்தான் ஆலோசனை நடக்கிறது.

மூத்த தலைவர்கள் அதற்காகத்தான் பேசுகிறார்கள்’ என தமிழக பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி நேற்று தெரிவித்திருந்தார். இதனால் அவர்களுக்குள் இன்னும் கூட்டணி முறியவில்லை, தொடர்ந்து பேசுகிறார்கள் என்ற குழப்பம் இருகட்சியினரிடையே உள்ளது. இதுகுறித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியை நேற்று மாலை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘பாஜவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இனி எந்த காலத்திலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது. நாங்கள் ஏற்கனவே சொன்னது சொன்னதுதான். அதிமுக, இனிமேல் பாஜ.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்பதுதான் உண்மை’ என திட்டவட்டமாக கூறினார்.

The post பாஜவுடன் பேச்சே கிடையாது: சொல்கிறார் கே.பி.முனுசாமி appeared first on Dinakaran.

Related Stories: