தென்னையைத் தாக்கும் கருந்தலைப் புழுக்கள்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் தென்னை சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கின்றது. தற்போது 4.2 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் கருந்தலைப் புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இந்தப் புழுக்கள் பச்சை கலந்த பழுப்பு நிற உடலையும், கரும்பழுப்பு நிற தலையையும் உடையது. இதன் முன்மார்பு பழுப்பு நிறத்திலும், பின்புறம் சிவப்பு நிறத்திலும் காணப்படும். உடலில் பழுப்பு நிற வரிகள் காணப்படும்.

தென்னைகளில் இந்த கருந்தலைப் புழுக்களின் தாக்குதலால் முதிர்ந்த ஓலைகள் முழுவதுமாக காய்ந்து கரும்பழுப்படைந்து விடுகிறது. கருந்தலைப்புழுக்களின் கூட்டம் தென்னை ஓலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி தின்று விடுகிறது. இதனால் ஓலைகளில் நடைபெறுகின்ற ஒளிச்சேர்க்கை அளவு குறைந்து தேங்காய்கள் சிறுத்து மகசூல் குறைந்து விடுகிறது. இதன் தாக்குதலால் தென்னை ஓலைகள் தீயில் கருகியவாறு தென்படும். இந்த கருந்தலைப்புழு தாக்குதல் ஏற்பட்ட ஓராண்டு காலத்தில் தென்னை மரத்தில் உள்ள ஓலைகளின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது.

தாய் அந்துப்பூச்சிகள் பறந்து சென்று மற்ற தென்னைகளில் முட்டை இடுவதால் இதன் தாக்குதல் வேகமாக பரவுகிறது. அதிக நெருக்கமாக தென்னை நடவு செய்யப்பட்ட தோப்புகளில் கருந்தலை புழுக்களின் தாக்குதல் மிக அதிகமாக காணப்படும். காற்றில் ஈரப்பதம் அதிகமாக காணப்படும்போது இதன் இனப்பெருக்கம் அதிகமாக காணப்படும். மேலும், நோய் தாக்கப்பட்ட ஓலைகளை வேறு இடங்களுக்கு எடுத்து செல்வதன் மூலமும் பரவுகிறது. இத்தகைய புழுக்களின் தாக்குதலை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மூலமே கட்டுப்படுத்த முடியும்.

தென்னை மரத்தின் அடிமட்ட பகுதியில் காணப்படும் அதிக சேதமடைந்துள்ள 2-3 காய்ந்த ஓலைகளை வெட்டி தீயிட்டு எரித்துவிட வேண்டும். குறிப்பாக கோடைக்காலம் துவங்கும் முன் செய்து விடுவது மிக நன்று. இதனால் அந்த ஓலைகளில் உள்ள லார்வா புழுக்கள் மற்றும் கூட்டு புழுக்கள் கருகி அழிந்துவிடுவதால் மற்ற தென்னைகளுக்கு பரவுவது குறைந்துவிடும். உயிரியல் முறையில் கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்த புழுப்பருவத்தில் இருக்கும்போது மெத்திலிட் மற்றும் பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சார்ந்த ஒட்டுண்ணிகளை 1-8 என்ற விகிதத்தில் இலைகளின் அடிப்பாகத்தில் விடுவதால் கருந்தலை புழுக்கள் கட்டுப்படும். இந்த ஒட்டுண்ணிகளை கொண்டைப் பகுதியின் மேற்புறம் விட்டால் சிலந்தி போன்ற பூச்சி உண்ணிகள் அவற்றை உண்டு விடும். மேலும், இலையின் அடிப்பாகத்தில் ரசாயனத் தெளிப்பு செய்து இருந்தால் 3 வாரங்கள் கழித்து இந்த ஒட்டுண்ணிகளை விட வேண்டும். இந்த ஒட்டுண்ணிகளை மழை பெய்யாத மற்றும் அதிகமாக காற்று வீசாத நேரத்தில்தான் விட வேண்டும். யூலோபிட், பிராக்கிமெரியா, சாந்தோபிம்பிளா போன்ற ஒட்டுண்ணிகள் கருந்தலைப் புழுவின் கூட்டுப்புழுக்களைக் மிக சிறப்பாக கட்டுப்படுத்தும்,

கருந்தலைப் புழுக்களின் தாக்குதல் ஒட்டுண்ணிகளால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும்போது ஓலையின் அடிப்பகுதிகளில் பின்வரும் பூச்சிக்கொல்லி மருந்தில் ஏதேனும் ஒன்றை நன்கு படுமாறு தெளிக்கவும். டைக்குளோர்வாஸ் (100 இசி) 0.2 மி.லி/லி (21) மாலத்தியான் 50 இசி (0.5 மி.லி/லி) (அ) குயினால்பாஸ் 0.5 மி.லி/லி (அ) பாஸலோன் 0.5 மிலி/லி என்ற அளவில் பூச்சி மருந்தும் அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி ஒட்டும் திரவத்தையும் சேர்த்து ஓலைகளின் கீழ் பகுதியில் உள்ள நூலாம்படைகள் மீது நன்கு படும்படி தெளிக்கவும்.

தென்னைக்கு உரமிடும் முறை…

தென்னை மரத்தில் நல்ல மகசூல் பெறவும், குரும்பைகள் உதிராமல் இருக்கவும் அதற்கு சரியான நேரத்தில் சரியான உரங்களை கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்களுக்கு, மரம் ஒன்றுக்கு 50 கிலோ மக்கிய தொழுஉரம் அல்லது பசுந்தாள் உரம், 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ பொட்டாஷ் மற்றும் 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு ஆகியவற்றை இரண்டாகப் பிரித்து முதல் முறையாக ஜூன் – ஜூலை மாதத்திலும், இரண்டாம் முறையாக டிசம்பர் – ஜனவரி மாதத்திலும் இட வேண்டும். அவ்வாறு உரமிடும்போது மரத்தைச் சுற்றி 2 மீட்டர் அளவு தள்ளி வட்டமாக குழி பறித்து உரமிட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதுவே 2, 3 மற்றும் 4ம் ஆண்டு மரங்களாக இருந்தால், முன்பு தெரிவிக்கப்பட்ட உர அளவில் முறையே 1/4, 1/2, 3/4 அளவு உரமிட்டால் போதுமானது. உரமிடும்போது மண்ணில் போதுமான அளவு ஈரம் இருக்க வேண்டியது அவசியம். சொட்டு நீர்ப்பாசன முறையில் உரமிடுகையில் தெரிவிக்கப்பட்ட அளவில் 75 சதவீதம் இட்டாலே போதும்.

The post தென்னையைத் தாக்கும் கருந்தலைப் புழுக்கள் appeared first on Dinakaran.

Related Stories: