நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு மீது பொருளாதார தடை: காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு மீது பொருளாதார தடை விதிக்க ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வற்புறுத்த வேண்டும் என காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்தார். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பேசுகையில், ‘காவிரிநீர் குறித்து தமிழ்நாடு விவசாயிகளிடம் விழிப்புணர்வு வரவேண்டும்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு மீது பொருளாதார தடை விதிக்க தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்’ என்றார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், ‘நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். நீதிமன்ற அனுமதியுடன் துணை ராணுவத்துடன் கர்நாடக மாநிலம் சென்று அணையை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முதல்வர் முயற்சி எடுக்க வேண்டும்’ என்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பேசுகையில், ‘விவசாயத்தை பாதுகாக்க கர்நாடக அரசை எதிர்த்து வணிகர் சங்கம் தமிழ்நாடு முழுவதும் விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்’ என்றார்.

*நாகையில் ரயில் மறியல்
தமிழகத்துக்கு தண்ணீர் தராமல் வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மற்றும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று காலை ரயில் மறியலில் ஈடுபட ரயில்வே கேட் அருகே, சங்க பொதுச்செயலாளர் தனபாலன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர். விவசாயிகள் கையில் நெற்பயிர்களுடன் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி ரயிலை மறிக்க பேரணியாக வந்தனர். வழியிலேயே போலீசார் விவசாயிகளை சுற்றி வளைத்து தடுத்தனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையில் காலை 7.40 மணியளவில் காரைக்காலில் இருந்து திருச்சிக்கு பாசஞ்சர் ரயில் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் நின்று புறப்பட்டது. இதனையறிந்த விவசாயிகள் 3 பேர், திடீரென ரயில் நிலையத்திற்கு சென்று, ரயில் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மெதுவாக வந்ததால் 200 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் படுத்திருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 41 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாகப்பட்டினம் அருகே திருமருகல் வவ்வால்அடி, திருப்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

The post நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு மீது பொருளாதார தடை: காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: