டெல்லி ராஜ்காட்டில் மம்தா மருமகன் தர்ணா

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்குவங்க மாநிலத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு கேட்டு முதல்வர் மம்தா மருமகன் அபிஷேக் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்குவங்க மாநிலத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என்று மேற்குவங்க அரசு கூறிவருகிறது. இதுதொடர்பாக டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா நினைவிடத்தில் போராட்டம் நடத்தப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது.

தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளிகளுடன், முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தலைமையில் மேற்குவங்க அமைச்சர்கள், கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள் நேற்று ராஜ்காட்டில் திரண்டனர். காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு இரண்டு மணி நேரம் கறுப்புக் கயிறு கட்டி, பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கனை பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினார்கள். அதை தொடர்ந்து அபிஷேக் பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் அங்குள்ள லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளனர்.

* 25 லட்சம் போலி வேலை அட்டைகள் சிபிஐ விசாரணைக்கு பரிசீலனை
மேற்கு வங்கத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டிய ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், அங்கு 25 லட்சம் போலி வேலை அட்டைகள் வழங்கியது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’அனைத்து மாநிலங்களுக்கும் நிதி விடுவிக்கப்படுகிறது.

எந்த மாநிலத்தின் நிதியையும் ஒன்றிய அரசு நிறுத்துவதில்லை. முறைகேடுகள் நடக்கும்போது, ​​நாங்கள் நிதி வழங்குவதை நிறுத்துகிறோம். இதுவரை மேற்கு வங்காளத்திற்கு ரூ.2.50 லட்சம் கோடியை விடுவித்துள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்திற்கு ரூ.54,000 கோடி ஒன்றிய அரசு வழங்கி உள்ளது’ என்றார்.

The post டெல்லி ராஜ்காட்டில் மம்தா மருமகன் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: