தீபாவளி கொண்டாட்டத்துக்கு ‘குட்டி ஜப்பான்’ ரெடி… 300 வகை பட்டாசுகளுடன் மிரட்டுது சிவகாசி


* தயாரிப்பு, பேக்கிங் பணிகள் மும்முரம்
* விலையில் பெரியதாக மாற்றம் இருக்காது

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 42 நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மற்றும் பேக்கிங் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. தீபாவ‌ளி வ‌‌ந்து ‌வி‌ட்டாலே ம‌கி‌ழ்‌‌ச்‌சிதா‌ன். குழ‌ந்தைக‌ள் மு‌த‌ல் பெ‌ரிய‌வ‌ர்க‌ள் வரை ச‌ந்தோஷமாக இரு‌க்கு‌ம் நேர‌ம் ப‌ட்டாசு வெடி‌க்கு‌ம் நேர‌ம்தா‌ன். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் 1,070 பட்டாசு ஆலைகள்தான் பூர்த்தி செய்கின்றன. ஒரு நாள் கொண்டாட்டமே என்றாலும், ஒரு வருடம் அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ஓய்வறியா மனிதர்களை கொண்ட ஊர் சிவகாசி. செல்லமாக குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் இப்பகுதியின் பட்டாசுகள் தனித்துவம் மிக்கவையாக இருக்கின்றன.

3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழில்கள் மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. சீன பட்டாசு, ஜிஎஸ்டி வரி, பசுமை பட்டாசு, பேரியம் நைட்ரேட் தடை, சரவெடி உற்பத்திக்கு தடை, பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை, நாடு முழுவதிலும் பட்டாசு வெடிக்கும் நேரம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் கடந்த 6 ஆண்டுகளாக பட்டாசு தொழிலுக்கு பல நெருக்கடிகள் வந்தாலும், அத்தனையும் எதிர்கொண்டு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பட்டாசு உற்பத்தியில் சிவகாசி பட்டாசு ஆலைகள் பிசியாக உள்ளன. பட்டாசு உற்பத்தி சார்ந்த தொழில்களான பிரிண்டிங், அட்டை பெட்டி தயாரித்தல், குழாய் டியூப், கெமிக்கல் பேக்கேஜிங், கட்டிங் போன்ற தொழில்களும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

தினமும் தீபாவளிதான்…
பட்டாசு ஆலைகளில் விசில் போன்ற ஒலியெழுப்பும் பட்டாசு வகைகளும், வானில் சென்று வெடிக்கும்போது பல வண்ணங்களை உமிழ்ந்தபடி வெடித்துச் சிதறும் பேன்சி ரக பட்டாசுகளும் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரித்து முடிக்கப்பட்ட பட்டாசுகள் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினந்தோறும் மாலை நேரத்தில் சோதனைக்காக வெடித்துப் பார்க்கப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் எப்போதும் வாண வேடிக்கைதான். இது காண்போரை மெய்சிலிர்க்கச் செய்கிறது.

பட்டாசுகள் பலவிதம்
பட்டாசு பிரியர்களை கவரும் வகையில் 300க்கும் மேற்பட்ட வகை பட்டாசு மற்றும் மத்தாப்பு, வாணவேடிக்கை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பச்சை, மஞ்சள், சிவப்பு, தம்தமாக்கா என 40 வகை மத்தாப்புகள் உள்ளன. சங்கு சக்கரங்கள் 35 வகைகளில் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் பாம் வகைகள், வானில் வேடிக்கை நிகழ்த்தும் ராக்கெட்டுகள், பாராசூட் வகைகள் குவிக்கப்பட்டு உள்ளன. 10 சாட் வெடி முதல் 500 சாட் வெடிவரை பல்வேறு ரகங்களில் இருக்கின்றன. இவை வானில் வெடிக்கும்போது பல வண்ணங்களில் மிளிர்ந்து பார்ப்பவர்களை பரவசம் அடையச்செய்யும்.

தயாரிக்க 4 நாட்கள்
நாம் ஒரு நிமிடத்தில் வெடிக்கும் பட்டாசு வகைகள் ஒரே நாளில் தயாரிக்க கூடியவை அல்ல. ஒரு பட்டாசை தயாரித்து பேக்கிங் செய்ய 4 நாட்கள் வரை ஆகின்றன. முதல் நாளில் மருந்து கலவை, மருந்து செலுத்துதல், 2வது நாளில் திரி வைத்து முனை மருந்தை காய வைத்தல், 3வது நாளில் லேபிள்கள் ஒட்டி காய வைத்தல், 4வது நாளில் முழுமை பெற்ற பட்டாசுகளை பெட்டியில் அடைத்து சலோன் ஒட்டி பேக்கிங் செய்தல் என ஒரு பட்டாசு முழுமை பெற 3 முதல் 4 நாட்கள் வரை ஆவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது மழை காலங்களில் கூடுதலாக ஒரு சில நாட்கள் ஆகிவிடும் என்றும் கூறுகின்றனர்.

விலை ஏற்றமா?
சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் கருப்பசாமிபாண்டியன் கூறும்போது, ‘‘சிவகாசி பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வெளிமாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் பட்டாசு அனுப்பும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சிவகாசி பட்டாசு கடைகளில் உள்ளூர் விற்பனை ஆயுத பூஜை முதல் சூடுபிடிக்கும். கடைசி நேரத்தில் பட்டாசுகள் டிமாண்டுடன் விற்பனையாகும். ஒவ்வொரு கம்பெனி பட்டாசுகளுக்கு ஏற்ப விற்பனை விலையும் தள்ளுபடியும் மாற்றம் இருக்கும். கடந்தாண்டு விற்பனை செய்யப்பட்ட விலையில்தான் இந்த ஆண்டும் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு சில பட்டாசு கம்ெபனிகளின் தரத்திற்கு ஏற்ப விலைகள் மாறுபாடு இருக்கும்’’ என்றார்.

சிவகாசி வந்த சீன பட்டாசு
பட்டாசு என்னும் பொருளுக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் வரலாறு உள்ளது. இன்று உலகமெங்கும் பட்டாசு பயன்படுத்தப்படுகிறது. பட்டாசை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். சீனத்திற்கு வந்த பல்வேறு பயணிகளின் வழியாக உலகமெங்கும் பட்டாசு பரவியது. பட்டாசு கண்டுபிடிக்கப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வுதான். அதன் வேதியியல் செயற்பாடு குறித்த விளக்கத்தை நவீன அறிவியல் கொடுக்கிறது. ஆனால், அறிவியல் பயன்பாட்டுக்கு முந்தைய பழங்காலத்திலேயே சீனர்கள் பட்டாசை கண்டுபிடித்து வெடிக்கச் செய்துள்ளார்கள். இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, கேரள மாநிலம் திருச்சூர் ஆகிய இடங்களில் மட்டும் தீப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளன.

வறண்ட பூமியான சிவகாசியின் பள்ளி நண்பர்கள் சண்முகநாடார், அய்யநாடார் ஆகிய இருவரும் கொல்கத்தா சென்று, அங்கு தீப்பெட்டி தொழிலை கற்றுக்கொண்டு சிவகாசி பகுதியில் முதலில் 1923ல் தீப்பெட்டி தொழிற்சாலைகளை ஆரம்பித்தனர். பிறகு அவர்களது பார்வை பட்டாசு தயாரிப்பு மீது திரும்பியது. சீனாவில் பட்டாசு தயாரிப்பை ‘சும்மா’ பார்வையிட சென்ற அவர்கள், வறண்ட பூமியான சிவகாசி பகுதியில் பட்டாசை தயாரித்தால், கொளுத்தும் வெயிலில் ரொம்ப சீக்கிரம் தயாரிக்கலாமே என்ற எண்ணம் வந்தது. உடனே சீனாவில் தங்கி பட்டாசு தொழிலை கற்ற அவர்கள், சிவகாசியில் சின்னதாக பட்டாசு தொழிலை தொடங்கினர்.

முதன் முதலாக அவர்கள் தயாரித்தது சின்ன அளவிலான ‘சீனி’ வெடியைத்தான். இப்போது சிவகாசியில் பட்டாசு தொழில் ஆலமரம் போல் பல கிளைகள் பரப்பி விருட்சமாகி நிற்கின்றது. இப்போது சின்னதும், பெரியதுமாக 1070க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன.

The post தீபாவளி கொண்டாட்டத்துக்கு ‘குட்டி ஜப்பான்’ ரெடி… 300 வகை பட்டாசுகளுடன் மிரட்டுது சிவகாசி appeared first on Dinakaran.

Related Stories: