தேர்தல் ஆதாயத்திற்காக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜ கையில் எடுத்துள்ளது: காங். தேசிய செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு

சென்னை: ‘‘நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத பாஜ அரசு, தேர்தல் ஆதாயத்திற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கையில் எடுத்துள்ளது’’ என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் லாவண்யா பல்லால் குற்றம்சாட்டியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவருக்கு, சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.வாசு, மாநில செயலாளர் கடல் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், லாவண்யா பல்லால் ஜெயின் நிருபர்களிடம் கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜிவ் காந்தியின் கனவு திட்டமாகும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா வேண்டும் என வலியுறுத்தி வந்ததே காங்கிரஸ்தான். ஆகையால் இதில் நாங்கள்தான் வெற்றியாளர். உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் 50% இடஒதுக்கீடு தமிழகத்தில்தான் முதன்முதலில் பெண்களுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி காலத்தில் இருந்தே பல்வேறு முறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதும், போதிய ஆதரவு கிடைக்காததால் வெற்றி பெற செய்ய முடியவில்லை. 2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்த மசோதாவை கொண்டு வந்த போது பாஜவினர் நிறைவேற்ற விடவில்லை. பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் பாஜ தலைவர்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது.

குஜராத், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜ தலைவர்கள் பெண்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும்போது மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வராத பாஜ அரசு இப்போது கொண்டு வந்திருப்பது ஏன்?. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத பாஜ அரசு, தேர்தல் ஆதாயத்திற்காக இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கையில் எடுத்துள்ளது. இது பெண்களையும் இந்திய மக்களையும் ஏமாற்றும் செயல். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும்போது மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வராத பாஜ அரசு இப்போது கொண்டு வந்திருப்பது ஏன்?

The post தேர்தல் ஆதாயத்திற்காக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாஜ கையில் எடுத்துள்ளது: காங். தேசிய செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: